எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 29 August 2015

படித்ததில் பிடித்தவை (சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்)


மழையென்பது யாதென...



 “நாய்க்குடைக்கடியில்

 அதிகாலை மழையில்

 நனையாத புற்கள்..!”




“மரங்களை
வெட்டினால்தான்
மழை பொழியும்
மரத்தடிப் புற்கள்
பேசிக்கொண்டன...”

   - சேயோன் யாழ்வேந்தன்.

Monday, 24 August 2015

விலகல்


“ரயில்
வருகிறதா...இல்லையா...
என பார்த்து பார்த்து
தண்டவாளத்தை
ஒவ்வொருவரும்
தாண்டி செல்கையில்...

தாண்டாமல்
தண்டவாளத்திற்கு
அருகே சோகமாக நின்ற
அந்த பெண்
என்ன செய்வாரோ என்று
எனக்கான ரயிலில்
ஏறியப் பிறகும்
பதைபதைக்கிறது
மனசு..!”
-     K. அற்புதராஜு.

Wednesday, 19 August 2015

படித்ததில் பிடித்தவை (விரலைக் கிள்ளும் நகம் - கவிதை)


விரலைக் கிள்ளும் நகம்
சுப்ரமணிய செட்டியார்
நகரில்
கோவிந்தசாமி முதலியார்
தெருவில்
ராமசாமி நாயக்கர்
சந்தில்
குப்புசாமி ஆசாரி
மண்டபத்தில்
நடக்கும்
கவிதைப் போட்டி
தலைப்பு

“சாதிகள் இல்லையடி பாப்பா..!”

Friday, 14 August 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை - 2)


“சொந்தக்
காலில்தான்
நிற்கிறான்...

பொய்க்கால்
குதிரையின்
உழைப்பாளி..!”
-  தஞ்சை நெப்போலியன்.



“அம்மாவுக்கு
அனுப்பியிருந்தார்கள்
புத்தாண்டு வாழ்த்து
அவள்
இறந்துவிட்டது
தெரியாமல்...

சற்று முன்னதாக
கிடைத்திருந்தால்
சாகாதிருந்திருப்பாளோ..!”

                            -  மனுஷ்யபுத்திரன்.

Monday, 10 August 2015

படித்ததில் பிடித்தவை (எறும்பு - கவிதை)


எறும்பு
“செத்துப்போன
ண்த்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்...

பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை
விருந்தைச் சுமக்கும்
கர்வமும் இல்லை
அவைகளுக்குள்..!”

-          வசந்தகுமாரன்
(மனிதன் என்பது புனைப்பெயர்)

Thursday, 6 August 2015

படித்ததில் பிடித்தவை (காதலிலே ரெண்டு வகை – சுஜாதா கட்டுரை)


காதலிலே ரெண்டு வகை! (சைவம், அசைவம் அல்ல!) சுஜாதா.

பிப்ரவரி 14ஐ உலகமே காதலர் தினமாகக் கொண்டாடும்போது, ஆஸ்திரேலியாவில் அதை நூலக தினமாகக் கொண்டாட விரும்புகிறார்கள். நூலக நேசர்கள் ஏறக்குறைய காதலர்கள் போலத்தான்நூலகத்தைப் பார்த்துவிட்டால் சோறு, தண்ணீர் வேண்டாம்! இவர்கள், காதலர்கள் இரண்டு தரப்பினருக்கும் சேர்த்து பிப்ரவரி 14நூலகத்தில் காதல் செய்வோர்தினமாகக் கருதலாம் என்று தோன்றுகிறது. உலகமே காதலரைக் காதலிக்கிறது என்கிறார் ஷேக்ஸ்பியர். மற்ற வீட்டுக் காதலர்களையும் திரைப்படக் காதலர்களையும் நாம் நேசிக்கையில், அதே காதல் நம் வீட்டுக்குள் கால் வைத்துவிட்டால் விரட்டாத பெற்றோரே இல்லை. இதற்குக் காரணம், பிள்ளைகளின் மேல் அதிக எதிர்பார்ப்பும், அவரவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களும்தான் என்பது, யோசித்தால் புரியும்.


காதல் பற்றி என் நண்பர் ஒருவர் பி.ஹெச்டி. அளவுக்கு ஆராய்ச்சி செய்து, புத்தகமே எழுதியிருக்கிறார். ஆதலினால் காதல் செய்வீர் என்று நான் ஒரு நாவலுக்குத் தலைப்புக் கொடுப்பதற்கு முன்பே, அதே தலைப்பில் புத்தகம் எழுதிவிட்டார். காதல் எப்படி நம் உலகத்துக்கு அவசியமானது, இனவிருத்திக்கும் முக்கியமாக இன வேறுபாட்டுக்கும் அவசியமானது என்பதை ஆராய்ந்து எழுதியிருந்தார். சிவப்பான பெண்கள் கறுப்பான ஆண்களை விரும்புவதும், கட்டுப்பாடு உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேற்று சாதியிலோ மதத்திலோ காதல் செய்வதையும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் குறிப்பிட்டு இருந்தார். இயற்கை மேம்பாட்டை, மாறுதலை நாடுவதன் அறிகுறி என்று அற்புதமாக எழுதியிருந்தார். அவரது மகள்தான் ஆராய்ச்சிக் குறிப்புகளைப் படியெடுத்து, புத்தகமாக அச்சடிக்க ஃபாரம் ஃபாரமாக புரூஃப் திருத்திக் கொடுத்து வந்தாள். ஒரு நாள் அந்த மகள், அன்புள்ள அப்பா, நான் செந்திலை மணந்து கொண்டுவிட்டேன். ஆசீர்வதியுங்கள் என்று கடிதம் எழுதி, பெங்களூருவிலிருந்து போட்டோ அனுப்பியிருந்தாள். ஒரே மகள்! செந்தில், அச்சாபீஸில் எடுபிடி வேலை செய்து வந்த இளைஞன். காதலுக்குச் சாதி இல்லை. இப்போது பேராசிரியர், காதல் பற்றிப் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதி வருகிறார். உன்னை நீ அறிந்துகொள்!”, “செயல்படுசிறைப்படாதே! போன்ற டைட்டில்களில் இந்தப் புத்தகங்கள் குறுகிய காலத்தில் நான்கைந்து பதிப்புகள் கண்டிருக்கின்றன.


என் அனுபவத்தில், இத்தனை வருஷங்களில் காதலுக்கு இரண்டு உதாரணங்கள் பார்த்திருக்கிறேன். என்னுடன் எம்.ஐ.டியில் படித்த சக மாணவன் அழகாக இருப்பான்; படிப்பு வராது. நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன். பரீட்சையில் அநியாயத்துக்குக் காப்பி அடிப்பான். என்னுடன் பரீட்சை சமயத்தில் குரூப் ஸ்டடிக்கு வந்து முக்கியமான கேள்விகளுக்கு பிட் எழுதிக் கொள்வான். தனக்கு வந்த காதல் கடிதங்களையெல்லாம் என்னிடம் காட்டுவான். அவன் வசித்து வந்தது ஒரு முன்னறையில். அந்த வீட்டில் இருந்த ஒரு பெண், அவனது அறையின் ஜன்னலோரத்தில் தினம் காதல் கடிதம் வைத்துவிட்டுச் செல்லும். ரொம்ப அந்தரங்கமாக, பெயர் போடாமல் எழுதியிருக்கும். அந்தக் கடிதங்களையெல்லாம் அவன் கேலி செய்வான். எங்களிடம் இரைந்து படித்துக் காட்டுவான். அந்தப் பெண்ணை என்னடா செய்யப் போகிறாய்? என்ற கேட்டபோது, கழட்டிவிட வேண்டியதுதான்என்றான் அலட்சியமாக! துரோகி, பாதகா என்று திட்டினால், நீ வேற! எனக்கு முன்னாடி இந்த ரூம்ல இருந்தவனுக்கும், இவ இதே மாதிரி கடிதம் எழுதியிருக்கா. வேற வேலையில்லை இவளுக்கு!என்றான். இது ஒரு வகை கழற்றிவிடப்பட்ட காதல்.


மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, எனக்குக் கல்யாணமாகியிருக்க வில்லை. என்னுடன் டியூட்டியில், கம்யூனிகேஷன் ஆபீஸராக இருந்தவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். அவர் பெயர் ஹார்ட்லஸ். இருவரும் நைட் டியூட்டி பார்ப்போம். என்னைவிட வயதில் மூத்தவர். செம்பட்டைத் தலையும், பச்சைக் கண்களும், அழகான கையெழுத்துமாக, ராத்திரி டியூட்டியில் தூங்கவே மாட்டார். சின்னப் பையன், புதிதாகச் சேர்ந்திருக்கிறான் என்று என் மேல் வாத்சல்யம் காட்டினார். தான் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்று ஒரு நாள் சொன்னார். அவர் காதலித்த பெண் திருமணம் வரை, கிட்டத்தட்ட சர்ச் வாசல் வரை வந்துவிட்டு, கடைசி நிமிஷத்தில் திடீர் என்று மனம் மாறி, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு, அந்தத் தேசத்துக்குப் பறந்து போய்விட்டாளாம். அதனால், ஹார்ட்லஸ் கல்யாணமே செய்துகொள்ளவில்லை. அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி, நாலைந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, கணவனை இழந்து திரும்ப பல்லாவரம் வந்துவிட்டாள். ஹார்ட்லஸ் தன் ஐம்பத்து நாலாவது வயதில் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு, மற்றவனுக்கு அவள் பெற்ற பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போலப் பாவித்து, அவர்களின் காலேஜ் அட்மிஷனுக்காக அலைந்துகொண்டு இருந்தார். 

காதலித்துவிட்டுக் காணாமல் போய்விடுபவர்களும் உண்டு; கடைசி வரையில் மறக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு!
(நன்றி: ஆனந்த விகடன் 13.02.2008.)
*** *** *** *** ***

Monday, 3 August 2015

படித்ததில் பிடித்தவை (அ. வெண்ணிலா கவிதை)


புத்தம் சரணம் கச்சாமி
“பயணம் செல்லும் வெளியூர்களிலெல்லாம்
புத்தர் சிலைகளை வாங்குவது வழக்கம்
ஒன்று நானாகத் தேடிப் போவேன்
அல்லது புத்தரே கண்ணில் பட்டு
அமைதி தவழும் தன் முகத்தைக் காட்டி
என்னை வாங்க வைத்து விடுவார்.

எல்லா சிற்பிக்கும் வாகானவர் புத்தர்
பளபளப்பான கருங்கல்
வெள்ளை மாவுக்கல்
கூழாங்கல்
காகிதக்கூழ்
எதில் வடிக்கப்பட்டாலும்
வசீகரித்துவிடுபவர்  புத்தர்.


நீண்ட அவரின் காதுகள்
எதையும் அவரிடம் சொல்லிவிடலாம் என்ற
நம்பிக்கையைத் தந்து வாங்கச் செய்துவிடும்
இதழ்க்கடையோரம் விரியும் புன்னகை
குளிர் தருவை நினைவூட்டும்
ஆசையைக் கடக்கவே முடியாமல்
எல்லா பயணங்கள் முடிந்தும்
அழுக்குத் துணி மூட்டைகளுக்கு மத்தியில்
புத்தரோடுதான் வீடு திரும்புவேன்.

வீடு முழுக்க சேர்ந்துவிட்ட புத்தர் சிலைகளுக்கு
மத்தியில் புது புத்தருக்கு இடம் தேடவே
ஒன்றிரண்டு மாதங்களாகிவிடும்
பொருத்தமான இடம் கொடுத்து
புத்தரை அமரச்செய்த பிறகு
புத்தர் வீட்டுப் பொருட்களில் ஒன்றாக
அடையாளம் இழந்துபோவார்.


மேசையில் புத்தருக்கு எதிரிலேயே அமர்ந்து
எழுதிப் படித்தாலும்
மகான் ஒருவரை எதிர் வைத்திருக்கிற
உள்ளுணர்வு எழுவதில்லை
தேடும் பொருட்கள் அகப்படாத கோபத்தில்
புத்தர்களை வேகமாக இங்குமங்கும்
இடம் மாற்றுவேன்
உடையாத புத்தரை  ஒன்றிரண்டு முறை
தூக்கிக்கூடப் போட்டிருக்கிறேன்.

வீட்டின் வரவேற்பறை
கணினி அறை
என கண்ணில் படும் இடங்களில் எல்லாம்
புத்தரை நிரப்பிவைத்திருந்தாலும்
என் மனதில் புத்தர் இல்லை.


எழுதும் போது
பறக்கும் தாள்களுக்கு
சிறு புத்தனை
தாள் அடக்கியாகக்கூட
பயன்படுத்திருக்கிறேன்.

தூசி படிந்தும்
உருண்டும் புரண்டும்
குழந்தையின் கைபொம்மை போல்
உருவற்று இருக்கும்
புத்தருக்குக் கோபமே வந்ததில்லை.


அகதி நண்பனொருவன்
வீடு வந்த நள்ளிரவொன்றில்
மொத்த புத்தரும் வெளியேறினார்கள்
வீட்டைவிட்டு..!”

                                                     -   அ. வெண்ணிலா.