எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 31 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


அழகு
“மழை
அழகுதான்
வீடு
ஒழுகாதவரை..!”
                            -   நாதன்.


தேடல்
“புதிதாய்க்கட்டி
குடியேறியதிலிருந்து
அவ்வப்போது
வீட்டுக்குள் நுழைந்து
தன் மரத்தைத்
தேடிவிட்டுப் போகிறது
அணில் குட்டி ஒன்று..!”

                          -   வீ. விஷ்ணுகுமார்.

Sunday, 24 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


தயக்கம்
“மினரல் வாட்டர்
வைத்திருப்பவர்களிடம்
தாகத்திற்கு தண்ணீர்
கேட்க தயக்கமாக
இருக்கிறது..!”
                    -   மணிகண்டபிரபு.


நிறைவு
“காலியாய்
வீடு திரும்பும்
லஞ்ச் பாக்ஸில்
நிறைகிறது
பெற்ற வயிறு..!”

                -  கர்ணாசக்தி.

Sunday, 17 May 2015

கிராமத்திலிருந்து வந்த வெள்ளைப் பூசணிக்காய்...


“கோடை விடுமுறையில்
ஒரு வாரம் குடும்பத்துடன்
கிராமத்துக்கு சென்று
நகரத்துக்கு திரும்பும் போது
காரிலேயே தேங்காய்,
மாங்காய், புளி, கருவாடு,
உளுந்து, பச்சைப்பயிரோடு
ஒரு வெள்ளை பூசணியும்
வீட்டுக்கு வந்து சேர்ந்தது...

ஒரு வாரத்தின் முகநூல்
செய்திகளை பார்த்தப்போது
வெள்ளை பூசணியின்
மருத்துவப்பயன் பற்றிய
செய்தியைப் படித்து, பிடித்து,
நண்பர்களுக்கு பகிர்ந்து,
வீட்டில் மனைவிக்கு
காண்பித்தும்...

சமையல் செய்யாமல்
அந்த வாரத்தில் வந்த
அமாவாசை அன்று
எங்கள் எல்லோரையும்
நடு ஹாலில் நிற்க வைத்து
திருஷ்டி சுற்றி தெருவில்
உடைக்கப்பட்டது அந்த
வெள்ளைப் பூசணிக்காய்..!”

         -     K. அற்புதராஜு.

Wednesday, 13 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


“சார் கருநாகம்
விட்டுவிடு.
சார் கொடும்புலி
விட்டுவிடு.
சார் மலைப்பாம்பு
விட்டுவிடு.
சார் மதயானை
விட்டுவிடு.
சார் மனுஷன்
விட்டுவிடு.
சார் தமிழன்
சுட்டுவிடு..!”

- ஜெயாபாரதிப்ரியா.


“ஆற்றுக்கும்
மணலுக்குமான
தொப்புள்கொடி
நீள்கிறது
அள்ளிச் செல்லும்
லாரியின்
கதவிடுக்கில்..!”
- ந. சிவநேசன்.

Saturday, 9 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


“கொண்டாட்டமான  ஒரு
மனநிலையின் போது
கடந்து செல்பவர்களின்
மீதெல்லாம்
அன்பு பீறிடுகிறது..!”
(Twitter.com/kalasal.)



“மழையைப்
பிடிக்கும்
குழந்தை...
தன் கைகளுக்குள்
குளம்
செய்கிறாள்..!”

(Facbeook.com/Raajaa Chandrasekar.)

Tuesday, 5 May 2015

படித்ததில் பிடித்தவை (சம்பத் இளங்கோவன் கவிதைகள்)


“அக்காவின்
குழந்தைப் பருவத்தை
தங்கையோ தம்பியோ
வந்து சீக்கிரமே
துரத்தி விடுகிறார்கள்..!”

 - சம்பத் இளங்கோவன் & ரூபாவதி.
*** *** *** *** *** *** *** *** *** *** ***
“பறவைகள்
மௌனம்
மரத்தடியில்
உறங்கும் 
குழந்தை..!”

- சம்பத் இளங்கோவன்.