எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 14 June 2022

படித்ததில் பிடித்தவை (“காலத்தின் நீளம்” – அசோகமித்திரன் கவிதை)

 


*காலத்தின் நீளம்*

 

யாருக்கு நினைவிருக்குமோ என்னவோ

மௌண்ட் ரோடு பச்சை சிவப்பாக

மாறும் விளக்கில்லாத மௌண்ட் ரோடாக

இருந்த காலமது

நடுத் தெரு போலீஸ்காரனுக்கு

இருட்டில் விளக்குத் தொப்பி

அவனும் எட்டு மணிக்குப் போய்விடுவான்

விளக்குத் தொப்பி மட்டும் இருக்கும்.

இன்னும் சிறிது நேரம்

நான் சைக்கிளில் நடுத் தெருவில்...

எதிரே வெகு வேகமாய் லாரி ஒன்று.

அதுவும் நடுத் தெருவில்..! எனக்கு

என்னென்னமோ மனச்சுமைகள்

தக்க தருணத்தில் சைக்கிளை

சிறிது ஒடித்து சுமை தாங்கி வரும்

அந்த லாரியில் மோதினால்

இருட்டில் யாருமில்லா அந்தத் தார்பரப்பில்

யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரிந்தாலென்ன?

எனக்குத் தெரியாதே?

அந்த ஒரு கணத்தில் கணமா?

அது கணத்தில் ஐந்தில் பத்தில் நூறில்

ஆயிரத்தில் ஒரு பங்கு தானிருக்கும்.

அந்தக் கால அணுவில்

என்னை சைக்கிளை ஒடித்துப் போகாமலிருக்க

எது செய்தது?

எது செய்ததோ... அந்தக் கால அணு

இப்போது இருபது ஆண்டுகளுக்கும்

மேல் நீண்டு விட்டது

இன்னும் நீண்டு கொண்டே இருக்கும்.

நான் இருக்கும் வரை

நானிருக்கும் வரை காலமே அணு..!

 

 *அசோகமித்திரன்*



3 comments:

  1. இந்தக் கவிதை
    அசோகமித்திரனின்
    தனிமுத்திரையைக்
    கொண்டிருப்பதோடு
    இன்றைக்கும் பழைமை
    தோன்றாமலும் இருக்கிறது.
    வாழ்க்கையைக் கொடுத்த
    ஒரு க்ஷணத்தை, அந்த
    காலத்துண்டை எழுத,
    கவிதை என்னும் வடிவம்தான்
    சிறந்தது என்று
    தேர்ந்தெடுத்திருக்கிறான்
    அந்தப் புனைகதையின்
    சாதனையாளன்.

    அவரது 'இன்று' நாவலில்
    இடம்பெறும் கவிதை இது.

    அதுவும் இதுவுமாகும் வாழ்வும்
    மரணமுமாகும் ஒரு நாடக
    கணத்தில் நின்று
    எழுதியிருக்கிறார்.
    அதுதானே கவிதை.
    அந்த மின்னதிர்வு கவிதையின்
    பின்பாதியில் சுர்ரென்று
    இருக்கிறது.
    திகைப்புள்ளாக்கும்
    அதேவேளையில் தப்பித்த
    விடுதலையைக் கொடுக்கும்
    அந்த விந்தைக் கணமும்…
    ஆமாம் காலமே அணு...
    அணுவணுவாய் காலமும்.

    *எஸ். வைத்தீஸ்வரன்*

    ReplyDelete
  2. சீனிவாசன்14 June 2022 at 09:06

    😊😊😊

    ReplyDelete
  3. செல்லதுரை14 June 2022 at 09:07

    👍

    ReplyDelete