எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 13 August 2021

படித்ததில் பிடித்தவை (“அவளும் நானும்” – போகன் சங்கர் கவிதை)


 

*அவளும் நானும்*

 

அவளுக்கு

ஏதோ ஒரு சந்தோஷம்

என்னைக் கேலி செய்கிறவர்கள்

எல்லோருடனும் சேர்ந்துகொள்கிறாள்.

ஒவ்வொரு முறை

அதை அவள் செய்கிறபோதும்

உன்னை நான் எவ்வளவு நேசித்தேன்

என்று சொல்லிக் காட்டுகிறாள்

என்று தோன்றும்.

 

யாருக்கோ கொடுத்திருக்க வேண்டியது

உனக்கு கொடுத்தேன்

என்ற வெறுப்பின் இளிப்பு

என்றும் தோன்றும்.

 

அல்லது

இருக்கும்போது நீடித்த

அந்த நேசத்தின் மதுரத்தை

இந்த கசப்புகளின் மூலம்

கரைக்கப் பார்க்கிறாளோ?

அதற்கு எவ்வளவு கசப்பு தேவைப்படுகிறதோ

அவ்வளவுக்கு

அவள் என்னை நேசித்தாள்

என்றிருக்கட்டும்

என்றும் நினைத்துக் கொள்கிறேன்.

 

இனி என்ன செய்வது?

ஓடம்

நதியைக் கிழித்துச்

சென்ற பாதையை

நதி மீண்டும் மூடிவிட்டது..!

 

*போகன் சங்கர்*




8 comments:

  1. இக் கவிதையில்
    நேரடியான வலி இருக்கிறது.
    கவிதையை அது கூரிய
    பொருள் போல ஆக்கிவிடுகிறது.
    தொடமுடியாத இடத்தில்
    இருந்தாலும்கூட எங்கோ
    எவரையோ கீறிவிடுமென
    எண்ணச்செய்கிறது.


    சம்பந்தமில்லாத வரிகள்
    இறுதிப்படிமத்தில் இணையும்
    இக்கவிதை பலமுறை ஒடிந்து
    கட்டுபோட்டு குணமாகி
    இணைந்த எலும்பு
    போலிருக்கிறது என போகனுக்கு
    எழுதினேன்.
    இந்த மொழி, கொடும் அநீதி
    இழைக்கப்பட்டவன் அளிக்கும்
    வாக்குமூலம்போல சொல்
    சொல்லாகச் சொட்டும் தயங்கிய
    நடை இதை முக்கியமான
    கவிதையாக ஆக்குகிறது.

    - எழுத்தாளர் ஜெயமோகன்.

    ReplyDelete
  2. சத்தியன்13 August 2021 at 07:00

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. செல்லதுரை13 August 2021 at 07:01

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்13 August 2021 at 08:39

    அருமை.

    கவிஞர்களின் பார்வை.
    நேர் சிந்தனை,
    கற்பனை வளம்,
    நகைசுவை,
    எளிய உவமையின்
    மூலம் விளக்குதல்,
    சிந்திக்கத் தூண்டுதல்,
    இயற்கையின் மீது காதல்....
    இன்னும் நிறைய.....
    அவர்கள் ரசனையின்
    பொக்கிஷம்.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்13 August 2021 at 08:41

    நேசித்தவர்கள் காயப்படுத்தும்
    வேதனையை அழகாக கவிஞர்
    சொல்லியிருக்கிறார்.
    உவமை மிக அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா13 August 2021 at 15:41

    மிக அருமையான கவிதை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. கமல நாதன்13 August 2021 at 18:58

    மிகவும் அருமை
    பாராட்டுகள்

    ReplyDelete
  8. சிவபிரகாஷ்14 August 2021 at 10:05

    காலை வணக்கம்.
    மிக அருமையான
    கவிதை.
    ஒவ்வொரு பத்தியின்
    முடிவும் அருமை.

    ReplyDelete