எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 29 June 2021

படித்ததில் பிடித்தவை (“குட்டி தேவதைகள்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*குட்டி தேவதைகள்*

 

மருத்துவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்.

 

என் எண் வரவில்லை

அதனால் இன்னும் கூப்பிடவில்லை.

 

வலியை ஆறுதல்படுத்தியபடி

நினைவால் தடவிக்கொடுத்தபடி

அமர்ந்திருக்கிறேன்.

 

மருந்து நெடி கூடிய அந்த ஹாலில்

ஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி.

 

அம்மாவிடம் ஓடுவதும்

அவள் கையிலிருக்கும் குழந்தையை

முத்தமிடுவதுமாய்

 

அந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்

வலியை மறக்கச் செய்கின்றன.

 

பரவும் மணம் போல

அவள் வாசனையை

எல்லாக் கண்களும் முகர்கின்றன.

 

அவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது.

 

குட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு

மனம் ஒரு பதிலையும் தருகிறது.

 

ஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்.

 

சம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல

சொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்.

 

அந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன

சில பெயர்களும் கொஞ்சம் இசையும்.

 

என் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்.

 

இதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்.

 

உள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்.

 

ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்.

 

என் பொய்கள் ஏதோ ஒரு கதையை

அழைத்து வரத் தொடங்கினேன்.

 

ஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா

அவ பேருபேரும்….சின்ட்ரலா

 

அம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு

எனச் சொல்லியபடியே ஓடினாள்.

 

உண்மையான என் பொய்க்கு

நன்றி சொல்லியபடியே

கண் துளியைத் துடைக்க

என் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்.

 

முழுதுமாய் நீங்கிய வலியுடன்

நுழைந்தேன் மருத்துவர் அறைக்குள்..!

 

*ராஜா சந்திரசேகர்*

{தினகரன் தீபாவளி (2011) மலரில் வெளியானது.}



 

11 comments:


  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செந்தில்குமார். J29 June 2021 at 07:12

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீதர்29 June 2021 at 07:39

    கவிதை நன்று.

    ReplyDelete
  4. நந்தகுமார்29 June 2021 at 07:40

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. சத்தியன்29 June 2021 at 07:42

    கவிதை அருமை.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  6. சங்கர்29 June 2021 at 08:34

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்29 June 2021 at 08:35

    குழந்தைகளோடு
    அளவளாவும் போது
    கிடைக்கும் மகிழ்வு
    இறைவழிபாட்டில் ஏற்படும்
    ஆனந்தத்தை விட மேலானது.

    ReplyDelete
  8. சீனிவாசன்29 June 2021 at 08:36

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  9. செல்லதுரை29 June 2021 at 09:06

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  10. கமலநாதன்29 June 2021 at 11:34

    அற்புதமான
    கவிதை.
    படிக்கும் போதே
    காட்சி
    கண் முன்னே விரிகிறது.

    படித்தவுடன்
    பல குழுக்களில்
    பகிர்வு செய்தேன்.

    பதிவுக்கு
    பாராட்டுகள்.

    ReplyDelete