எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 23 January 2021

படித்ததில் பிடித்தவை (“பூனை” – தேவதேவன் கவிதை)

 


*பூனை* 

 

முதல் அம்சம்

அதன் மெத்தென்ற ஸ்பரிசம்

குழைவு அடிவயிற்றின்

பீதியூட்டும் உயிர் கதகதப்பு.

 

இருவிழிகள் நட்சத்திரங்கள்

பார்க்கும் பார்வையில்

சிதறிஓடும் இருள் எலிகள்.

 

நான்..! நான்..!என புலிபோல

நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்

உருளும் கோட்டமுள்ள சக்கரமென

புழுப்போல

அதன் வயிறசைதல் காணலாம்.

 

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத

சாமர்த்திய நடை இருந்தும்

மியாவ்என்ற சுயப்பிரலாப குரலால்

தன் இரையை தானே ஓட்டிவிடும்

முட்டாள் ஜென்மம்.

 

நூல்கண்டோடும்

திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்

விளையாடும் புத்திதான் எனினும்

பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு.

 

எலியை குதறுகையில்

பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்

நக்கி நக்கி பாலருந்துகையில்

தெரியவரும் இளகிய நாக்கையும்

ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்.

 

ஞாபகப்படுத்திப்பாருங்கள்

உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்

இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே

சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா..?

 

*தேவதேவன்*


2 comments:

  1. ஸ்ரீராம்23 January 2021 at 10:35

    ஆஹா!பூனையை குறித்த அழகான கவிதையை ஒரு உயிரியலாளர் பார்வையிலும், கவிஞரின் பார்வையிலும் அற்புதமாக வடித்தெடுத்த கவிஞரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  2. நந்தகுமார்23 January 2021 at 14:38

    அருமை.

    ReplyDelete