எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 10 January 2021

படித்ததில் பிடித்தவை (“புல்லின் குரல்” – தேவதேவன் கவிதை)


*புல்லின் குரல்*

 

அன்றைய அற்புதக் காட்சியாய்

சாலை நடுவே முளைத்து நின்றது ஒரு புல்.

 

புல்லின் குரல் கேளாது அதை மேயவந்த ஆடு,

என் கூப்பாடு கேட்டும் விலகாத அந்த ஆடு,

பதறி விலகியது வாகனம் ஒன்றின் உறுமல் கேட்டு.

 

அழிந்தும் அழியாது

மண்ணுக்குள் பதுங்கிக்கொண்டது புல்.

மழைக்கரங்கள்

மண்ணின் கதவுகளைத் தட்டுகையில்

ஆயத்தமாயின புல்லின் படைகள்.

 

சாலையின் மேல் மழையின் திராவகப் பொழிவு

சாலைக் கற்களை அரித்த

சிறுசிறு ஓடைகள்

இணைந்து இணைந்து

நதியாயின.

பாய்ந்து பாய்ந்து

(இடம் விழுங்கிப் பெருத்து)

வெள்ளமாயின.

போக்குவரத்து துண்டிக்கப்பட்டுத்

திகைத்து நின்றன வாகனங்கள்.

 

வெள்ளம் வடிந்து

ஆயத்தமாகிவிட்ட வாகனங்கள்முன்

புற்படைகளின் மறியல் கோஷங்கள்..!

 

*தேவதேவன்*


2 comments:

  1. ஸ்ரீராம்10 January 2021 at 12:53

    மிக அருமை. ஒரு சிறு நிகழ்வை அழகான கோணத்தில் பார்த்து இழைத்திருக்கிறார் கவிதையை.

    ReplyDelete