எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 29 July 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதா பற்றிய கட்டுரை)


சுஜாதாவைப் பற்றி திருமதி. சுஜாதா


எங்களுக்குத் திருமணம் நடந்தது 1963 ஜனவரி 28. அப்ப அவர் எஸ். ரங்கராஜன்ங்கிற பேரில் குமுதத்தில் சில கதைகள் எழுதியிருக்கார்னு தெரியும். நான் படிச்சதில்லை. கல்யாணத்துக்கு முன்னால அவரை நான் நேர்ல பார்த்ததில்லை. நல்லா படம் வரைவார், கிடார் வாசிப்பார்னு  கேள்விப்பட்டிருக்கேன். கல்யாணம் ஆனவுடன் அவர் ஆஃபீஸ் விஷயமா ஒரு டூர் போய்ட்டார். என்னை என் மாமனார் டெல்லிக்கு அழைத்துக் கொண்டு போய் குடித்தனம் வைத்துவிட்டு வந்தார். 63-ல இருந்து 69 வரை டெல்லியிலிருந்தோம். கவர்மெண்டில் டெக்னிகல் ஆஃபீசராக இருந்தார். டெல்லியில இருந்தப்ப பாஷை தெரியாம கொஞ்சம் கஷ்டப்பட்டேன். குழந்தைகள்  அங்கதான் பிறந்தாங்க. 69-ல் பெங்களூர் வந்துட்டோம். அப்புறம் அவர் 93-ல் ரிட்டையர் ஆகற வரைக்கும் பெங்களூரில்தான் இருந்தோம்.


70-கள்லேயே அவருக்குப் பெரிய ரைட்டர்ங்கிற பேர் வந்துடுச்சு. அவர் எப்பவும் நிறைய படிச்சுட்டே இருப்பார். எப்பவாச்சும்தான் எழுதுவார். பாப்புலரானதுக்கு அப்புறம்தான் ஞாயிற்றுக்கிழமைகள்ல உட்கார்ந்து தொடர்கதைகள் எல்லாம் எழுதிட்டு இருப்பார். அவர் சில சமயம் நாலைஞ்சு தொடர்கதைகள் கூட ஒரே சமயத்தில் எழுதியிருக்கார். எல்லோரும் நினைச்சுப்பாங்க அவர் தினமும் எழுதுவார்னு. அப்படியில்லை. தினமும் ஆஃபீசில் இருந்து வருவார். வந்துட்டு க்ளப்புக்குப் போய்டுவார். இவர் சீட்டாட மாட்டார். ஆடுறவங்களை வேடிக்கை பார்த்துட்டு இருப்பார். வீட்டுக்கு வந்து படிச்சுட்டு இருப்பார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுநேரம் இருந்து எழுதுவார். அப்படி எழுதினதுதான் நிறைய கதைகள். மத்தபடி வெளியே போனா புஸ்தகக் கடைக்குத் தான் போவார். ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க யார் வீட்டுக்கும் அவ்வளவா போக மாட்டார்.

வேலையிலே ரொம்ப சின்சியரா இருப்பார். மாசக் கணக்கில் வெளியூர் டூர் போய்டுவார். சில சமயம் காலங்கார்த்தால 4 மணிக்கு எல்லாம் இன்ஸ்டலேஷனுக்குப் போக வேண்டியிருக்கும். ஆளுங்க வரலைன்னா இவரே மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோண்ட ஆரம்பிச்சுடுவார். மத்த தொழிலாளிங்க என்ன சாப்பிடுவாங்களோ அதையேதான் இவரும் சாப்பிடுவார். யார்கிட்டயும் எந்தத் தனி மரியாதையையும் எதிர்பார்க்க மாட்டார். வேலைக்கு அஞ்ச மாட்டார். ரொம்ப நேர்மையான அதிகாரின்னு அவருக்குப் பேர் இருந்தது. அதுனாலயே அவரோட ப்ரோமோஷன் எல்லாம் ரொம்ப தாமதமாச்சு. வடக்கு, தெற்கு பாகுபாடு வேற. இவருக்கு நியாயமா கிடைக்க வேண்டிய  அங்கீகாரம் எதுவும் கிடைக்கலே. அதான் அந்த வேலைய விட்டுட்டு பாரத் எலெக்ட்ரானிக்ஸ்ல வந்து ஜாயின் பண்ணினார்.

பொதுவா அவர் ரொம்ப கலகலப்பா பழகக் கூடியவர். நண்பர்கள் கிட்டயெல்லாம் ஜாலியா பேசிட்டிருப்பார். கதை எழுத ஆரம்பிச்சதும் அவரோட மூட் மாறிடும். சீரியசாயிடுவார். உட்கார்ந்து யோசிச்சுகிட்டே இருப்பார். பசி தாகம் தெரியாது. சாப்பிடக் கூப்பிட்டாலும் வர மாட்டார். வீடு விஷயங்கள் எதுவும் அவருக்குத் தெரியாது. லௌகீகமான விஷயங்களைப் பத்தி அவர் யோசிக்க மாட்டார். நானும் அது பத்தி கம்ப்ளையிண்ட்ஸ் சொன்னது இல்லை. அதனால அவர் இடையூறு இல்லாம தன்னோட வேலைகளைச் செஞ்சுட்டு இருந்தார். பசங்க மேல ரொம்ப அட்டாச்மெண்ட் அவருக்கு உண்டு. ஆனா அவருக்கு ஆஃபிஸ் வேலையும், எழுத்து வேலையும் முழுக்க இருந்ததால குழந்தைங்க விஷயத்தில தனிப்பட்ட கவனம் எடுத்துக்க முடிஞ்சதில்லை. பசங்களை அப்படி ஆக்கணும், இப்படிப் படிக்க வைக்கணும் அப்படீன்னு எல்லாம் அவர் யோசிச்சதில்லை.படிக்கற குழந்தை எந்த ஸ்கூல்ல வேண்டுமானாலும் படிக்கும். நான் ஸ்ரீரங்க திண்ணை பள்ளிக்கூடத்தில்தான் படிச்சேன்அப்படீம்பார்.

அவர் விமர்சனங்களைப் பத்தி கவலைப்பட்டதே இல்லை. ஜாதியெல்லாம் சொல்லித் திட்டுவாங்க. அதுக்கு பதில் எழுத மாட்டார். அதைப் பொருட்படுத்தவும் மாட்டார். அவனுக்கு வேலை இல்லை. திட்டிட்டிருக்கான் அப்படீன்னு விட்டுடுவார். ஏன் உங்களுக்கு சாகித்ய அகாடமி கொடுக்கலைன்னு அவர் கிட்ட கேட்பாங்க. அவங்களுக்கு இஷ்டமில்லை. அதான் கொடுக்கலைஅப்படீன்னுடுவார். அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமாகவே இருந்ததில்லை.
** ** **

1 comment:

  1. FANTASTIC NARRATION SHE HERSELF CAN TRY WRITTING I THINK

    ReplyDelete