எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 21 February 2021

படித்ததில் பிடித்தவை (“மாற்றங்கள் அவசியம் அய்யனார்” – கார்த்தி கவிதை)

 

*மாற்றங்கள் அவசியம் அய்யனார்*

 

நுனியில்

குத்திவைத்த எலுமிச்சை

சாறுகளற்று

மஞ்சள் மறந்து சூம்பிப்போய்.

 

சிலையின் கீழ்

நிழலுக்கு ஒதுங்கும்

வழிதப்பிய கிடைமாட்டின் கழுத்தில்

மெல்ல இறங்குகிறது

கறுத்த கூர் நிழல்.

 

கீறிய அதன் கைப்பிடியில்

ஏதோ போதிக்கிறது

இளைப்பாறும் பட்டாம்பூச்சி

ரொம்ப நேரமாய்.

 

ஆறுபேர் தூக்கிவந்து

சொருகி வைத்த கருவி

பார்த்துவிட்டது

மழை வெயிலென

நிறையப் பருவங்கள்.

 

எல்லைக்குள் நுழையும்

சாணை பிடிப்பவன்

நேர்த்திக்கடன் முடிந்து

நிமிர்ந்து பார்ப்பான்

ஆச்சரியமாய் அதன் நீளம்.

 

ஓங்கி உயர்ந்த ஆகிருதி

தடித்த முறுக்கு மீசை

ஊர்காக்கும் பணியாளர்

பிடித்திருக்கும் புஜபலமெனப்

பெருமூச்சுவிடுபவரால்

கண்டுகொள்ளப்படாதது

அத்தனையும் சுமக்கும் மண்குதிரையே.

 

என்றாவதொருநாள்

யார் கனவிலோ வந்து

துருவேறிய

அம்மாம்பெரிய அரிவாளை

மாற்றச்சொல்லவிருப்பவர்

கேட்கப்போவது

பலியாடுகளை மட்டுமே..!

 

*கார்த்தி*


3 comments:

  1. நந்தகுமார்21 February 2021 at 07:26

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. அருமை அண்ணா

    ReplyDelete
  3. ஸ்ரீராம்21 February 2021 at 10:16

    மனிதர்களின்
    செளகரியத்திற்கும்,
    சுயநலத்திற்கும்
    உருவாக்கப்படும்
    சம்பிரதாயங்களை,
    உருவாக்கங்களை
    மிக மென்மையாக
    விமர்சிக்கும் கவிதை.

    ReplyDelete