எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 3 August 2015

படித்ததில் பிடித்தவை (அ. வெண்ணிலா கவிதை)


புத்தம் சரணம் கச்சாமி
“பயணம் செல்லும் வெளியூர்களிலெல்லாம்
புத்தர் சிலைகளை வாங்குவது வழக்கம்
ஒன்று நானாகத் தேடிப் போவேன்
அல்லது புத்தரே கண்ணில் பட்டு
அமைதி தவழும் தன் முகத்தைக் காட்டி
என்னை வாங்க வைத்து விடுவார்.

எல்லா சிற்பிக்கும் வாகானவர் புத்தர்
பளபளப்பான கருங்கல்
வெள்ளை மாவுக்கல்
கூழாங்கல்
காகிதக்கூழ்
எதில் வடிக்கப்பட்டாலும்
வசீகரித்துவிடுபவர்  புத்தர்.


நீண்ட அவரின் காதுகள்
எதையும் அவரிடம் சொல்லிவிடலாம் என்ற
நம்பிக்கையைத் தந்து வாங்கச் செய்துவிடும்
இதழ்க்கடையோரம் விரியும் புன்னகை
குளிர் தருவை நினைவூட்டும்
ஆசையைக் கடக்கவே முடியாமல்
எல்லா பயணங்கள் முடிந்தும்
அழுக்குத் துணி மூட்டைகளுக்கு மத்தியில்
புத்தரோடுதான் வீடு திரும்புவேன்.

வீடு முழுக்க சேர்ந்துவிட்ட புத்தர் சிலைகளுக்கு
மத்தியில் புது புத்தருக்கு இடம் தேடவே
ஒன்றிரண்டு மாதங்களாகிவிடும்
பொருத்தமான இடம் கொடுத்து
புத்தரை அமரச்செய்த பிறகு
புத்தர் வீட்டுப் பொருட்களில் ஒன்றாக
அடையாளம் இழந்துபோவார்.


மேசையில் புத்தருக்கு எதிரிலேயே அமர்ந்து
எழுதிப் படித்தாலும்
மகான் ஒருவரை எதிர் வைத்திருக்கிற
உள்ளுணர்வு எழுவதில்லை
தேடும் பொருட்கள் அகப்படாத கோபத்தில்
புத்தர்களை வேகமாக இங்குமங்கும்
இடம் மாற்றுவேன்
உடையாத புத்தரை  ஒன்றிரண்டு முறை
தூக்கிக்கூடப் போட்டிருக்கிறேன்.

வீட்டின் வரவேற்பறை
கணினி அறை
என கண்ணில் படும் இடங்களில் எல்லாம்
புத்தரை நிரப்பிவைத்திருந்தாலும்
என் மனதில் புத்தர் இல்லை.


எழுதும் போது
பறக்கும் தாள்களுக்கு
சிறு புத்தனை
தாள் அடக்கியாகக்கூட
பயன்படுத்திருக்கிறேன்.

தூசி படிந்தும்
உருண்டும் புரண்டும்
குழந்தையின் கைபொம்மை போல்
உருவற்று இருக்கும்
புத்தருக்குக் கோபமே வந்ததில்லை.


அகதி நண்பனொருவன்
வீடு வந்த நள்ளிரவொன்றில்
மொத்த புத்தரும் வெளியேறினார்கள்
வீட்டைவிட்டு..!”

                                                     -   அ. வெண்ணிலா.

No comments:

Post a Comment