எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 20 July 2015

படித்ததில் பிடித்தவை (ராயகோபுரம் - சுஜாதா கட்டுரை)


ராயகோபுரம் - சுஜாதா
ராயகோபுரத்தை ஒட்டியிருந்த சந்துகளில் ஒரு மாதிரி சொதசொதவென்ற கறுப்புப் பன்றிகளும், முனிசிபல் ஆயுதங்களுமாக இருக்கும். ஒரு தடவை டவுன் பஸ்ஸில் கோட்டை மெயின்கார்ட் கேட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஒரு திருடன் அந்தச் சந்தில் ஓடி மறைவதைப் பார்த்தேன். ராயகோபுரத்துக்கு வெளியே, ஆர்ச்சு வளைவாக ஒரு வாசல் இருக்குமே அதனுள் ஒரு காலனி; ஒட்டு வீடுகளாக உண்டு. அந்தக் காலனியையெல்லாம் நாங்கள் ஸ்ரீரங்கமாகவே கருதமாட்டோம். திருடன் அந்தக் காலனியிலிருந்து வெளிப்பட்டு, ராயகோபுரத்தை ஒட்டிய சந்தில் மறைந்தான். அவனைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் உள்ளே போய் நாற்றம் சகிக்கவில்லையென்று திரும்பி வந்து விட்டார்கள். மதிலெல்லாம் ஏற முடியாது; இங்கேதான் திரும்ப வந்தாக வேண்டும் என்று திருடனுக்காகக் காத்திருந்தார்கள். பேருக்குப் பேர், கம்பு, கொடிக்குச்சி, புளிய மிலாறு என்று வைத்திருந்தார்கள். எனக்குத் திருடன் வெளியே வராமல் இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது! சந்தின் அந்தப் பக்கம் மடக்க, ஒரு கோஷ்டி போயிருந்தது.

அந்தத் திருடன் பொறுமையிழந்து அல்லது நாற்றம் சகிக்காமல் வெளியே வந்து வசமாக மாட்டிக் கொண்டான். அவர்கள், அவனைப் பந்தல் காலில் கட்டித் தர்ம அடி அடித்தார்கள். ஒரு குட்டிப் பையன் கூட இடைவெளி வழியாக அவனை எட்டி உதைத்தான். திருடுவியா, திருடுவியா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவன் பதிலே சொல்லாமல் ஒவ்வொரு அடித்தவரையும் புதியவரைப் போல பார்த்துக்கொண்டே இருந்தான். வாயோரத்தில் ரத்தம் தெரிந்தாலும் அழவே இல்லை.

நான் ஓரத்திலிருந்து அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அடியும் என்மேல் விழுவது போலத் தோன்றியது. என்ன ஸார் திருடிவிட்டான்? என்றதற்கு, லட்சுமண ராவ் வீட்டில் திருட வந்ததாகவும், எடுத்துக் கட்டி’ யிலிருந்து எட்டிப் பார்த்ததாகவும் ராயர் பெண் வீட்டுக்கு விலக்கானதால் மாடியிலிருந்து கூச்சல் போட, தாவிக் குதித்து ஓடிப் போய்விட்டான் என்றும் சொன்னார்கள். போலீஸ்காரர்கள் வந்து திருடனை அடிக்காதீங்க. ஸ்டேஷன்ல நாங்க பார்த்துக்கிறோம். அடிக்காதீங்க என்று விடுவித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பிறகு, அந்தத் திருடனை என் வாழ்நாளில் மறுபடி பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை.



விதியின் சின்ன விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். நான் போனவாரம் பம்பாய் கம்ப்யூட்டர் மகாநாட்டுக்குச் சென்றிருந்தபோது, க்ராஸ் மைதானத்தில் எக்ஸிபிஷனில் ஹாலுக்கு ஹால் நடந்து, அலுத்துப் போய் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தபோது, ஒரு ஆள் என் அருகில் வந்து, நீங்க தானே என்று தயங்க, ஆமாம் நான் தான்’ என்றேன்.

நீங்க ஸ்ரீரங்கம்னு கேள்விப்பட்டேன். ஃபோட்டோவில் பார்த்திருக்கேன்

சந்தோஷம். நீங்களும் கம்ப்யூட்டரா…?

ஆமாம். நானும் உங்களைப் போலவே ஸ்ரீரங்கம், கம்ப்யூட்டர்

ஸ்ரீ ரங்கத்தில் எங்கே?

அம்மா மண்டபத்தில் இருந்தேன். ஸ்ரீரங்கத்தில் மறக்க முடியாதது ராயகோபுரம். அந்தக் கோபுரத்துக்கு முன்னால் ஒரு முறை என்னைக் கம்பத்தில் கட்டி உதை உதைன்னு உதைச்சிருக்காங்க!

அப்படியா! எந்த வருஷம்?

1949!

வாட் எ சர்ப்ரைஸ்! அந்த சம்பவத்தை நான் பார்த்திருக்கேன். பந்தல் கால்ல கட்டி வெச்சுநீங்கதானா அந்தத் திருடன்! இப்ப என்ன பண்றீங்க ?

கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயன்டிஸ்ட்டா இருக்கேன். நீங்ககூட என்னை அடிச்சீங்களா அன்னைக்கு?

சேச்சே! உங்களைப் போலீஸ்காரர் நல்ல வேளை அழைச்சுட்டுப் போயிட்டார்! ஆச்சரியம் ஆச்சரியம்! ஸ்ரீரங்கத்தில் திருட்டிலிருந்து, கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயன்ஸா?

திருடவும் இல்லை ஒண்ணும் இல்லை ஸார்!”

அப்படியா? பின்னே எதுக்கு உங்களைத் துரத்தி வந்து அடிச்சாங்க?

இதைச் சொன்னால் கதை பண்ணிடுவீங்கஅன்னிக்கு நான் லட்சுமண ராவ் பொண்ணை, மாலினி மாலினின்னு வாட்ட சாட்டமா இருப்பா தெரியுமா ?

தெரியாது என்றேன் அவசரமாக.

அவளைப் பார்க்கத்தான் மாடிக்குப் போயிருந்தேன். மாட்டிக்கிட்டேன்! ஓடி வந்துட்டேன்! அந்தப் பொண்ணும் சமயோசிதமா திருடன் திருடன்னு கத்திருச்சு? நான் திருடன் இல்லை. அந்த மாலினியைப் பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லியிருந்தால் அவளை நிமித்தியிருப்பாரு அவங்கப்பா!

யூ மீன் அந்த அடியெல்லாம் ஒரு பொண்ணைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கறதுக்காக வாங்கிக்கிட்டீங்களா?

ஆமாம். ஐ வாஸ் ஸோ ரொமாண்டிக் அட்தட் டைம்! அந்த மாலினி எங்க இருக்கா இப்பன்னு கூடத் தெரியாது!

- சுஜாதா (“ஓரிரு எண்ணங்கள்” தொகுப்பில் ‘ராயகோபுரம்’ – சில பகுதிகள்            மட்டும்)
*** *** ***

No comments:

Post a Comment