எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 27 July 2015

பார்த்ததில் பிடித்தது – “அகல்யா” குறும்படம்


குறும்படம்: Akalya (Horror Short Film)






இணையம் துவங்கி வாட்ஸப்பில் கூட இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் குறும்படம் அகல்யா”. சுஜோய் கோஷ் கதை, திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், சில நிமிடங்களில் ஒரு சின்ன த்ரில்லர் படமாக அனைவரையும் கட்டிப்போட்டு விடுகிறது. சுஜோய் கோஷ் தனது கஹானி படத்துக்குப் பின் இயக்கியுள்ள குறும்படம் அகல்யா. 14 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த த்ரில்லர் படத்தில் அகல்யாவாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார்.


ராமாயணத்தின் ஒரு பாத்திரமான அகல்யா தன் கணவன் போல் வந்த இந்திரனால் ஏமாற்றப்பட்டுவிடுவாள். அதற்கு சாபமாக அவளை கல்லாக போக வேண்டும் என சபித்துவிடுவார் அவளது வயதான கணவன் கௌதமா. ஆனால் அது அப்படியே உல்டாவாக தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த அகல்யாபடத்தின் கதை. மாடர்ன் பெண்ணாக அகல்யா இருப்பின் அவள் கண்டிப்பாக தவறு செய்த இந்திரனைத்தான் கல்லாக்கியிருப்பாள் என்பதையே கதைக்களமாக நமக்கு காட்டுகிறது.

குறும்படத்தைக் காண: 




கதை இதுதான், ஒரு போலீஸ் அதிகாரி  ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார். அங்கே ஆரம்பமாகிறது படம். சிறிது நேரத்தில் ஒரு அழகான பெண் அகல்யா கொஞ்சம் கவர்ச்சியான உடையில் கதவைத் திறக்க போலீஸின் கவனம் சிதறுகிறது. வீட்டுக்குள் வரும் போலீஸ் இந்திரா சென்னின் கண்கள் அங்கிருக்கும் வித்தியாசமான பொம்மைகள் மீது விழுகிறது. காபி, டீ ஏதும் வேண்டுமா? எனக் கேட்க சரி எனக் கூறும் போலீஸிடம் அகல்யா, இந்த பொம்மைகளுக்கு இதுவே வேலை. யாராவது புது ஆள் உள்ளே வந்தால் குறும்பு செய்வது எனக் கூறி எடுத்து வைக்கிறார்.



போலீஸ் அதிகாரி சிலை வடிவமைப்பாளர் கௌதமா சாது குறித்து அகல்யாவிடம் விசாரிக்க இதோ வரச் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார் அகல்யா. அப்போதுதான் போலீஸின் கண்கள் ஒரு பொம்மையின் மீது விழுகிறது. அது தான் தேடி வந்த நபரை ஒத்திருப்பதை கண்டறிகிறார். சிறிது நேரத்தில் கௌதம் சாது அங்கே வர உங்க மகள் இந்த பொம்மை குறித்து கூறினார், என்றவுடன் அகல்யா என் மகள் அல்ல, மனைவி. சரி விடுங்கள், எல்லோரும் அப்படித்தான் நினைப்பார்கள் எனக் கூறிவிட்டு அவர் வந்த காரணம் குறித்து கேட்க, அர்ஜுன் என்ற வாலிபர் காணாமல் போய்விட்டார் கடைசியாக அவர் உங்களைத்தான் சந்தித்துள்ளார் என கேட்க, கௌதமா தான் வைத்திருக்கும் ஒரு மாய கல் குறித்து சொல்கிறார். இந்தக் கல்லை வைத்துக் கொண்டு நாம் யாராக மாறவேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே மாறிவிடுவோம் என சொல்கிறார் கௌதமா.

இதை நம்பாத போலீஸ் ஆபிசரிடம், வேண்டுமானால் நீங்களே சோதித்து பாருங்கள், கல்லை வைத்துக்கொண்டு என்னை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த மொபைலை என் மனைவியிடம் கொடுங்கள், எனக் கூற போலீஸ் இந்திராவும் அதை செய்கிறார். அகல்யா இந்திராவை அவள் கணவன் கௌதமா எனக் கட்டிபிடிக்க, அங்கிருக்கும் கண்ணாடியில் இந்திரா, கௌதமாவாக தெரிய அதிர்ச்சியில் மொபைலை கொடுத்துவிட்டு நகர்கிறார்.



எனினும் குரங்கு மனம், அகல்யாவின் அழகு என இந்திராவின் அறிவை அகல்யா இருக்கும் அறைக்கு மீண்டும் இழுக்கிறது. மீண்டும் போலீஸ் அதிகாரி இந்திரா சென் விழித்துப் பார்க்கையில், தான் எதனுள்ளேயோ அடைபட்டிருப்பதை உணர்ந்து கத்துகிறார். அப்போதுதான் கேமரா அப்படியே தூரம் சென்று அடுக்கி வைத்திருக்கும் பொம்மைகளில் நிற்கிறது.

அக்லயாவாக ராதிகா ஆப்தே, போலீஸ் அதிகாரி இந்திரா சென்னாக டோடா ரோய், சௌத்ரின் கௌதமா சாதுவாக சௌமித்ரா  சாட்டர்ஜி நடித்துள்ளனர். சின்ன கதாபாத்திரங்கள், ஒரே லோகேஷன் என எளிமையாக சமுதாயத்தை கொஞ்சம் சிந்திக்க வைத்திருக்கும் படம். மாடர்ன் தேசத்தில் அகல்யா பிறந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் என்பதின் கற்பனையே இந்த அகல்யா குறும்படம். ஆண்களின் மீது தவறுகளே இருந்தாலும் பெண்களை அதற்கு தண்டிக்கும் புராணங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல சாட்டையடி.

-   ஷாலினி நியூட்டன் (சினிமா விகடன் உலக சினிமா, 25.07.2015)

*** *** *** *** ***

No comments:

Post a Comment