எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 17 October 2015

மனசுக்குள் மத்தாப்பூ...


“மின்சார ரயிலில்
அதுவரை புத்தகம்
படித்துக்கொண்டிருந்த
நான்...

அக்கம்பக்கம்
பார்த்தப்போதுதான்
கவனித்தேன்...

அந்த கைக்குழந்தை
அப்பாவின் தோளில்
சாய்ந்தப்படி
வைத்தக்கண் வாங்காமல்
என்னையேப் பார்த்துக்
கொண்டிருந்தது
ஒரு சிறியப்புன்னகையுடன்...

என்னால் புத்தகத்துக்குள்
திரும்பவே முடியவில்லை...

அடுத்த நிறுத்தத்தில்
அம்மா அப்பாவோடு
அந்தக்குழந்தை
இறங்கியப் பிறகும்
மனது முழுவதும்
நிறைந்திருந்தது
அந்த குழந்தையின்
சிரித்த முகம்.

மீண்டும் புத்தகத்தை
படிக்க ஆரம்பித்தப்போது...
ஒவ்வொரு எழுத்தும்
குழந்தையின் முகமாக மாறி
ஒரு பெரிய குழந்தையாக
உருமாறியது...

மிகவும் மெதுவாக
புத்தகத்தின் பக்கத்திலிருந்து
குழந்தையை தூக்கி
மடியில் வைத்துக்கொண்டேன்.

புத்தகம் மடியில் தூங்கியது..!”

           -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment