எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 2 November 2020

படித்ததில் பிடித்தவை (“வெளிச்சமாய் இருட்டு” – கவிதாபாரதி கவிதை)

 


*வெளிச்சமாய் இருட்டு*

 

ஆதிமனிதன்

கல்உரசி

நெருப்பு கண்டுபிடித்தபோது

முதலில் அறியப்பட்டது

வெளிச்சமல்ல

இருட்டு.

 

இருட்டு

நேரத்திற்குத் தகுந்தவாறு

நமக்கு நேசமாயிருக்கிறது.

அயர்ந்து கண்ணுறங்கவும்

காமத்தில் கிறங்கவும்

இருட்டு

எல்லோருக்கும்

இஷ்டமானதாயிருக்கிறது.

 

இருளற்ற உலகம்

எப்படி இருக்கும்..?

 

அள்ளி இறைக்க நீரின்றி

வறண்டு கிடக்கும்

கண்மாய்களில் நேரம் அறியாது

கிரிக்கெட்

விளையாடி விளையாடி

சிறுவர்கள் களைத்துச் சரிவார்கள்.

 

வால்தூக்கி

அலையும் நாய் போல

தூக்கம் தொலைத்த மனிதர்கள்

மனநிலை பிறண்டு

நாக்குழறி அலைவார்கள்.

 

பள்ளிகளின்

வேலை நேரம் அதிகரிக்கும்.

 

பொதிமூடை

புத்தகச்சுமை இன்னும் கூடுதலாகும்.

 

ஆரம்பப்பள்ளி தாண்டும் முன்

அனைத்துக் குழந்தைகளும்

கூன் விழுந்த கிழங்களாகும்.

 

நினைக்கவே

நெஞ்சம் பதறுகிறது..!

 

சரி

எப்போதுமே

பொழுது இருட்டாயிருந்து விட்டால்...?

 

இடுப்புவலி

எடுக்கும் பெண்களின்

எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

கொசுக்களின் கூட்டம்

இன்னும் கூடுதலாகும்.

 

கொசுவர்த்தி வியாபாரிகள்

குபேரன்களின்

கொள்ளுப் பேரன்களாவார்கள்.

 

நாள் ஒன்று என

நடைபெறும் கொலை

மணிக்கொன்று என மாறும்.

 

அன்றாடம்

அம்புலி பார்த்து

சலித்துப் போன குழந்தைகள்

உணவோடு

பொய்யைப் பிசைந்தூட்டும்

தாயிடம்

விண்மீன்களைப் பிடித்துத்தரச்சொல்லி

அடம்பிடிப்பார்கள்.

 

இருள் என்பது

குறைந்த ஒளி என்ற

பாரதியின் வரிகள் குறித்த

ஆராய்ச்சிக்கட்டுரைகளின்

எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

இலவச தொலைக்காட்சிப் போல

வீட்டுக்கொரு

பெட்ரோமாக்ஸ் விளக்கு

தேர்தல் அறிக்கையில் சேரும்.

 

அனைவரும் அஞ்சும் வகையில்

இருள் நீக்க வந்த நிலாவே

என்ற போர்டுகள்

பிரம்மாண்டமாய் முளைக்கும்.

 

நினைக்கவே பயமாயிருக்கிறது.

 

சரியும், தவறும்

கலந்து செய்த

மனிதனைப் போல

இருளும், வெளிச்சமும்

பின்னிக்கிடக்கும் பொழுதுகள்.

 

இடத்திற்குத் தகுந்தவாறு

பொழுதுகள்

எல்லோருக்கும்

பிடித்தமானதாய் இருக்கிறது..!”

 

*கவிதாபாரதி*

1 comment: