எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 11 May 2020

படித்ததில் பிடித்தவை (“கைவிடுவது” – மனுஷ்ய புத்திரன் கவிதை)


கைவிடுவது

பணி நீங்கிச் சென்றவள்
சம்பளப் பாக்கிக்காக
தனது பழைய அலுவலக வரவேற்பரையில்
தயங்கித் தயங்கி நிற்கிறாள்.

தான் சகலமுமாய்
ஆட்கொண்டிருந்த அந்த  இடத்தில்
இன்று ஏதேனும் ஒரு நாற்காலியில்
உட்காரலாமா என தடுமாறினாள்.

அவளது பழைய சகாக்கள்
இயன்றவரை அவளுக்கு
கருணைகாட்டவே விரும்பினர்.
ஆனால் ஏதோ ஒரு சங்கடம்
அங்கே பனியாகப் படர்ந்தது.

அவளுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீர்
தேவையாக இருந்தது.
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
தண்ணீர் இருக்குமிடம்
அவளுக்குத் தெரியும்.
பத்தடி தூரம்
அப்போது நூறு மைலாகிவிட்டது.

பிறகு அவள் அங்கிருந்தவனிடம்,
நான் கொஞ்சம் கழிவறையை
உபயோகித்துக்கொள்ளலாமா..?
என்றாள் கூச்சத்துடன்.
அவன் திசை காட்டினான்.
அவ்வளவு பரிச்சயமான இடத்தில்
அவள் திக்கற்று நடந்து சென்றாள்.

மனிதர்கள் ஒருவரைக் கைவிடுவதைக் காட்டிலும்
இதயமற்றதாக இருக்கிறது
ஒரு இடம் ஒருவரைக் கைவிடுவது.

                  -   மனுஷ்ய புத்திரன்.

1 comment: