எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 6 March 2018

தூக்கணாங்குருவி கூடு



தூக்கணாங்குருவி கூடு
பார்க்க வீட்டுக்கு வரீங்களா?
ஞாயிறு காலை
நண்பரிடமிருந்து கைப்பேசி
அழைப்பு.

சிறு வயதில்
கிராமத்தில் பார்த்தது
நகர வாழ்க்கையில்
அபூர்வமான நிகழ்வு என
குளித்து விட்டு உடனே
கிளம்பினேன்
அடுத்த தெருவிலிருக்கும்
நண்பர் வீட்டுக்கு.

சொந்த வீட்டில்
கீழ்தளத்தில்
குடியிருக்கும் நண்பர்
வாடகைக்கு விட்டிருக்கும்
முதல் தளம்
இரண்டாம் தளம் கடந்து
மொட்டை மாடிக்கு
அழைத்துச் சென்றார்.

மூன்றாம் தளம் வரை
உயர்ந்து வளர்ந்து
சூரியனை தரிசிக்கும்
மாமரத்தில் கட்டியிருந்த
தூக்கணாங்குருவி
கூட்டை மிக அருகில்
பார்த்தோம்.

எங்களது குரல் கேட்டு
தூக்கணாங்குருவி
வெளியே வந்தது.
சுற்றும் முற்றும் பார்த்து
கீச் கீச்சென்று சத்தமிட்டு
பறந்து சென்றது.
அதன் துணைக் குருவியும்
அதனை பின் தொடர்ந்தது.
பறவைகளுக்கு 
வார விடுமுறை 
கிடையாது போல.

தனக்கும் துணைக்குமென
இரண்டு அடுக்கு கூடு.
அவ்வளவு அழகான கூட்டில்
காதல் தெரிந்தது.
முக்கியமாக மற்ற குருவிகளுக்கு
வாடகைக்கு விடவில்லை..!”

-    கி. அற்புதராஜு.

3 comments:

  1. கவிதை கடைசியில சூப்பர். அது சரி, எதற்காக இரண்டு முறை "பின்" ?....../ பின் அதன் துணைக் குருவியும்
    அதனை பின் தொடர்ந்தது..../ முதலில் வரும் பின் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

      Delete