எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 9 November 2015

நகரம் என்னும் நரகம்...


“ஒரு இடிந்த வீட்டிலிருந்தோ
புதரிலிருந்தோ அபூர்வமாக
நகர வீதியின் குறுக்கே
செல்லும் பாம்பை
வால் மறையும் வரை
பதைபதைப்புடன்
பார்க்காமலும்...

சைக்கிளிலிருந்து தவறிக்
கீழே விழும் பள்ளிக்கூடம்
செல்லும் சிறுவனுக்கு
உதவ முடியாமலும்...

வேகமாக செல்லும்
வாகனங்களால்
சாலையைக் கடக்க
முடியாமல் நிற்கும்
ஒரு குழந்தைக்கோ,
முதியவருக்கோ,
பார்வையற்றவருக்கோ
உதவ முடியாமலும்...

எப்போதாவது
பாகனுடன்
நகர் வலம் வரும்
யானையின்
பிரமாண்டத்தை
ரசிக்காமலும்...

செடிகளைத் தேடி
கிடைக்காமல்
சாலையோரம்
நின்றிருக்கும்
கார் மீது அமர்ந்து
செல்லும்
வண்ணத்துப்பூச்சிக்காக
வருந்தாமலும்...

நம்மை ஓட வைக்கிறது
நகரத்து வேகம்..!”

           -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment