எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 14 January 2017

படித்ததில் பிடித்தவை (டிகாக்ஷன் போடும் கலை..! சுஜாதா கட்டுரை)


டிகாக்ஷன் போடும் கலை..! சுஜாதா கட்டுரை

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப்போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம் போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது... மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.

டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்கஎன்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் புல் காப்பிப்பொடிப் பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.

காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை பில்ட்டரில் போடவேண்டும் என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது  கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா

மனைவி ஒரு பில்ட்டர் கலெக்டர். பல வகையான பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?)  ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறதுஎன்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்த பின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச்சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்ஊம்

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னுசே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கி வந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தரவேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பாஎன்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் டுப்பேற்றினேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரதயுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

“இன்னுமா காப்பி போடறீங்க?”

“தோ ஆச்சு!

“நான் வரட்டுமா?”

“வேணாம், வேணாம்அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

“இதோ ஆச்சு!என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள்,

தூ தூ’ என்று மனைவியின் கூப்பாடு.

“அழுத்தவே இல்லியா…”
கூவினாள் காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.

“எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளி மாதாவிடம் மோதினேன்.

“மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

“அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”

“எதை?”

“என் தலையை!

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

“ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

“எதையடி அழுத்தணும்…?”

“காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் வேலை முடிஞ்சிதுன்னு.

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.

அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை

“இதனுடைய மேல் பில்ட்டர் எங்கேஅட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

“காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.

“உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

“அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.

“காப்பிப் பொடியை அழுத்தணும்இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.

“செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாகஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.


“போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!என்று பாராட்டினேன். “எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடுஎன்றேன்.

“கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல் ஷாவனிஸம்!

“வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது... ஷாவனிஸமாவது... உளறல்.
*** *** ***

(நன்றி: சுஜாதா நினைவலைகள் – முகநூல் பதிவு)

No comments:

Post a Comment