எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 13 June 2020

படித்ததில் பிடித்தவை (“அமர்ந்து பறந்த சிறுகணம்” – வண்ணதாசன் கவிதை)


*அமர்ந்து பறந்த சிறுகணம்*

ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்
கை நினைத்தது.

ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்
பறவை நினைத்தது.

எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்..!

   *வண்ணதாசன்*

Friday, 12 June 2020

படித்ததில் பிடித்தவை (“மூளை” – யுகபாரதி கவிதை)


*மூளை*          

சிந்திப்பதற்கு
நாம் வைத்திருந்த
மூளையை
தங்கள் சேமிப்புக்கு
உரியதாக
மாற்றிக் கொள்கின்றனர்.

  *யுகபாரதி*

Thursday, 11 June 2020

படித்ததில் பிடித்தவை (“அஸ்தியாவின் உலகம்” – க.அம்சப்ரியா கவிதை)


*அஸ்தியாவின் உலகம்*

ஒரே ஒரு களிமண் உருண்டைதான்
வழங்கப்பட்டது பெருங்கருணையுடன்.

முதலில் அம்மா செய்தாள்
அது கொஞ்சம் பாலூட்டியது.

மறுபிசைவில் அப்பா செய்தார்
தலைகோதி முத்தமிட்டது.

இரண்டு பாகமாக உடைத்து
பிறகு திருப்தியுறாமல்
சிறுசிறு உருண்டைகளாக்கி
சிறு சிறு அண்ணன்களை உருவாக்கினாள்
அவர்கள் தோள்களில் அமர்த்தி
விளையாட்டுக் காட்டினார்கள்.

மீதமிருந்த சிறு உருண்டைகளை
தங்கைகளாக்கினாள்
ஓடிப்பிடித்து விளையாடியதோடு
சண்டையும் போட்டார்கள்.

இரவுக்கு என்ன அவசரமோ
தன்னைப் பகலாக்கத் துவங்க
களிமண் பிடுங்கப்பட
திடுக்கிட்டு விழித்த சிறுமி அதிஸ்யா
அன்றைய சமையல் வேலைக்குத் தயாராகிறாள்.

           *க.அம்சப்ரியா*

Wednesday, 10 June 2020

*மழைப் பேச்சு*


அலுவலகம் முடிந்து
வீட்டுக்கு செல்லும்போது
பெய்த சிறுமழைக்கு
ஒதுங்கியப் போதுதான்
முதன் முதலாக
பேச முடிந்தது...

மூன்று வருடத்துக்குமுன்
பக்கத்து வீட்டுக்கு
குடித்தனம் வந்தவருடன்..!”

       *கி.அற்புதராஜு*.

Tuesday, 9 June 2020

படித்ததில் பிடித்தவை (“மழை” – முகுந்த் நாகராஜன் கவிதை)



*மழை*

கடந்த 25 வருஷங்களில்
பதிவான மழை அளவுகளைவிட
அதிகம் என்றும் சொன்னார்கள்.
பெரியவர்கள் நல்ல மழைஎன்றும்
இளைஞர்கள் செமை மழைஎன்றும்
சொல்லிகொண்டார்கள்
எவ்ளோ தண்ணீ என்று
ஆச்சரியப்பட்டது குழந்தை..!”

*முகுந்த் நாகராஜன்*

Monday, 8 June 2020

படித்ததில் பிடித்தவை (“நதி” – இளம்பிறை கவிதை)


*நதி*

வந்து விழுகிற
எல்லாக் கற்களும்
விழுந்த இடத்தில்
மூழ்கிக் கிடக்க,

தன் போக்கில்
போய்க்கொண்டிருக்கிறது நதி...”

*இளம்பிறை*

Sunday, 7 June 2020

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் வயது” – நா.முத்துக்குமார் கவிதை)


*அப்பாவின் வயது*

உங்கள் அப்பாவுக்கு
வயதாவது என்பது
உங்கள் அப்பாவுக்கு மட்டும்
வயதாவதல்ல,
உங்களுக்கும்
வயதாகிறது என்பதே அது..!

   *நா.முத்துக்குமார்*.

Saturday, 6 June 2020

படித்ததில் பிடித்தவை (“ஊர்வலம்” – வைகறை கவிதை)


*ஊர்வலம்*

தண்ணீர் கேட்டு
காலிக் குடங்களுடன்
ஊர்வலம் சென்ற சாலையில்

மறுநாள்
குடம் கேட்டு
ஊர்வலம் போகிறது
மழை நீர்..!”

  *வைகறை*

Friday, 5 June 2020

படித்ததில் பிடித்தவை (“ஆசை” – கண்மணி குணசேகரன் கவிதை)


*ஆசை*

ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்…

கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்..!”

   *கண்மணி குணசேகரன்*

Thursday, 4 June 2020

படித்ததில் பிடித்தவை (“புரிதலின் அடர்த்தி” – லதா கவிதை)


*புரிதலின் அடர்த்தி*

குரலை மட்டுமே
சுமந்து வரும்
தொலைபேசி உரையாடலின்
சொற்களின் இடையில்
ஊடாடும் நுண்ணிய
மௌன இழைகள்
தானே நெய்து கொள்கிறது
புரிதலின் அடர்த்தியை..!”

       *லதா*

Wednesday, 3 June 2020

படித்ததில் பிடித்தவை (“காணாமல்போன கடிகாரம்” – செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)


*காணாமல்போன கடிகாரம்*

             
களவு போனது
கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு

அருவிக்குளியல்
தந்த
ஆனந்தமும்..!”

*செல்வராஜ் ஜெகதீசன்*

Tuesday, 2 June 2020

படித்ததில் பிடித்தவை (“நிரப்புதல்” – கா.சிவா கவிதை)


 *நிரப்புதல்*

வசித்த பறவைகள்
வேறிடம் தேடிக்கொண்டன.

மண்ணால் மூடப்பட்ட இடத்தில்
சிறு செடிகள் முளைத்தன.

நிழலில் அணைத்தபடி
ஒய்வெடுக்கும் பூனைகள்
அங்கு நிறுத்தப்படும்
வாகனங்களின்மேல்
துயில்கின்றன.

அண்டை வீட்டின் வண்ணம்
அடையாளமாக கூறப்படுகிறது.

புதிதாக திறந்த கடையில்
பழங்களும் கிடைக்கின்றன.

அம்மரத்தை அகழ்ந்ததால்
தோன்றிய என் அகஅகழியை
நிரப்புமென நிறுவியுள்ளேன்
சிறு போன்சாய் தொட்டியை..!”

       *கா.சிவா*

Monday, 1 June 2020

படித்ததில் பிடித்தவை (“கால்” – மணிகண்டபிரபு கவிதை)


*கால்*

வாங்கியவுடன்
கால் முளைத்துவிடுகிறது
செருப்புக்கு..!

*மணிகண்டபிரபு*