*நெகிழ்ச்சி*
“மலர்த் தொட்டியை
கொஞ்சம்
சுவற்றிற்கு
அருகிலேயே
வைத்துவிட்டேன்.
பூப்பதற்கு
முந்தைய நாள்
சுவற்றை
கொஞ்சம்
சீண்டிப்
பார்க்கிறது
மொட்டு.
அம்மாடி,
அத்தனை
உறுதி ஒன்றுமில்லை.
சிறுமகள்
தொட்ட
தந்தையின்
உடலென
கொஞ்சம்
நெகிழ்ந்துதான்
போனதென்
வீடு..!”
*ஆனந்த்குமார்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ஆனந்த்குமார்*
ஆனந்த்குமார் தமிழ் கவிஞர். https://www.kavithaikal.in இணைய இதழின் பொறுப்பாசிரியர்.
ஆனந்த்குமார் நாகர்கோயிலில் மார்ச் 22, 1984 அன்று சதானந்தன் - கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 2005-ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.
மனைவி பெயர் ஜெயஸ்ரீ. ஜூலை 3, 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் - அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா. கோவையில் புகைப்பட நிபுணராக உள்ளார்.
பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020- ல் என ஆனந்த்குமார் கூறுகிறார். சொல்வனம் இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020-ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை மார்ச், 2021-ல் வெளியாகியது.
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என அசோகமித்திரன், வைக்கம் முகமது பஷீர், அ. முத்துலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கவிதையில் தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன் ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறார்.
ஆனந்த்குமாருக்கு 2022-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த்குமார் கவிதைகளுக்காக கவிதை இணையதளம் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது.
'ஆனந்த்குமாரின் கவிதைகள் எளிமையான மொழியில் நம்மிடம் உரையாடுபவை. வாசகனாக கவிதைகளின் மொழிச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், அதன் மையத்தை நோக்கி எந்தவிதச் சிதறல்களும் இல்லாமல் மனதைக் குவிக்கமுடிகிறது. பல கவிதைகள் எளிமையான ஒரு சித்திரத்தை நம்முன் நிறுத்தி, சில வரிகளில் கவித்துவ உச்சத்தை அடைந்து, முழுமையான வாசிப்பனுபவம் அளிப்பவை’ என விமர்சகர் பாலாஜி ராஜு குறிப்பிடுகிறார்.
மலையாளக் கவிதை வரி ஒன்றுண்டு, கே.ஏ.ஜெயசீலன் எழுதியது.
ReplyDelete"இத்தனை எளிதாகவா இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன? இத்தனை பிந்தியா அதை நான் உணரவேண்டும்?"
எளிமையான ஒரு எண்ணம், ஆனால் முப்பதாண்டுகளாக என்னைத் தொடர்கிறது இந்த வரி.
இங்கே மலர்கள் விரிகின்றன, மலர்களைப் போல் எரிமலைகள் புகை மலர்கின்றன. விண்மீன்கள் தோன்றி மறைகின்றன. அத்தனை எளிமையாக. அதை உணரும் ஒரு தனிநிலை அகத்தே உண்டு. அதை வெளியே நிகழ்த்திக் காட்டுகின்றன ஆனந்த்குமாரின் கவிதைகள்.
அந்த கவித் தொடுகையை இந்த கவிதையிலும் கண்டேன்.
மலர் எழுந்து தொட்டு கற்சுவரை சற்றுக் கனியச் செய்கிறது. பட்டுத் திரை என சுவர் நெகிழும். மலரிதழ் என விரியும். வீடு ஒரு மாமலர் என ஒளியும் வண்ணமும் கொள்ளும் என நினைத்துக் கொண்டேன். மிகமிக மென்மையான மலர்த் தொடுகையைப் போல அத்தனை பேராற்றலை வேறேதும் அளித்துவிடக் கூடுமா என்ன?
*எழுத்தாளர் ஜெயமோகன்.*
(ஜூலை, 2021)