எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 25 February 2024

படித்ததில் பிடித்தவை (“வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்கு..!” – கல்யாண்ஜி கவிதை)

 

*வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்கு..!*

 

வண்ணத்துப்பூச்சியின்

பின்னாலேயே அலைவது

பிடிப்பதற்காக அல்ல

பிடிப்பது போன்ற

விளையாட்டுக்காக..!

 

*கல்யாண்ஜி*



2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. வண்ணத்துப்பூச்சியின் பின்னால் அலையும் சிறுமி அல்லது சிறுவன்தான் காட்சியின் மையம். அச்சித்தரிப்பை மட்டுமே மையமாகக் கொண்டு ஒரு கவிதையை அமைத்துவிட முடியும். அது தேடலின் தீராத இன்பத்தை முன்வைக்கும் ஒரு படிமமாக மாறவும் கூடும். ஆனால் கல்யாண்ஜி அக்காட்சியை ஒட்டி கூடுதலாக ஒரு சங்கதியை இணைக்கிறார். பின்னால் அலைவது பிடிப்பதற்காக அல்ல, பிடிப்பதுபோன்ற விளையாட்டுக்காகவே என்ற அறிவிப்பு ஒருகணம் நம்மை புன்னகைக்க வைக்கிறது. ஒருவேளை பிடித்துவிட்டாலும் அக்கணமே விடுவித்துவிட்டு மீண்டும் அதன் பின்னால் பிடிப்பதற்கு நம் மனம் ஆவலுறுகிறது.

    அந்தச் சங்கதி அவருடைய வாழ்வனுபவத்தின் வழியே அவர் பெற்ற துளி. அந்தத் தேன்துளி அச்சித்தரிப்பைத் தீண்டியதுமே, கல் மலராவதுபோல அக்காட்சி ஒரு அனுபவப்பெட்டகமாக மாறிவிடுகிறது. ஒரு பேருண்மையை போகிற போக்கில் விளையாட்டுத்தனமாக சொல்லிவிட்டுச் செல்கிறது. இதுதான் கல்யாண்ஜியின் கவித்துவம்.

    பிடிப்பதுபோன்ற விளையாட்டுக்காக என்னும் வரி இந்த வாழ்க்கையையே விளையாட்டாக எண்ண வைக்கிறது. பிறப்பென்றும் இறப்பென்றும் நித்தமும் நிகழும் விளையாட்டாகவும் எண்ண வைக்கிறது. அலகிலா விளையாட்டு நிகழும் களமென இந்த உலகத்தைக் கருத வைக்கிறது. இந்த விளையாட்டில் நம் பங்கு என்ன என்பது தெரிந்துகொள்வது எத்தகைய பேரின்பம் என்பதை உய்த்துணரவைக்கிறது. உணர்ந்த கணத்திலேயே அந்த உண்மை ஞானமாக மாறிவிடுகிறது. கதை சொல்லிக்கொண்டோ அல்லது ஏதோ ஓர் உரையாடலை நோக்கி கவனத்தைத் திசைதிருப்பிவிட்டோ, ஒரே கணத்தில் வலிக்காமலேயே ஊசி போட்டுவிடும் மருத்துவரைப்போல ஞானம் என்பதை ஞானம் என்ற சொல்லையே பயன்படுத்தாது நம் நெஞ்சில் ஆழத்தை நோக்கிச் செலுத்திவிடுகிறார் கல்யாண்ஜி.

    *பாவண்ணன்*
    (கல்லை மலராக்கும் கவிதைகள்)

    ReplyDelete