எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 4 April 2019

பேசாத எருமைகள்...



அலுவலகம் செல்லும் நான்
கூட்டத்தில் நின்று கொண்டே
ரயிலில் பயணிக்கையில்...

நிற்பவர்களிடையே புகுந்து
முதுகில் பையுடன்
எல்லோரையும் உரசிக் கொண்டே
நகரும் இளைஞன்
யாரையும் நகர சொல்லவில்லை.
காதில் ஹெட்செட்டுடன்
பாடல் கேட்டுக் கொண்டே
செல்கிறான் அவன்..!

சற்று நேரம் கழித்து
யாரோ முதுகில்
கை வைப்பது போல
உணர்கையில்
பின்னால் ஒருவன்
முண்டிக் கொண்டிருந்தான்
முன்னே செல்ல.
அவனும் பேசவில்லை.
வளைந்து நெளிந்து
இடம் கொடுத்தால்
என் இடத்தில் சரியாக
இடம் பிடித்தவன்
கைப்பேசியை
பையிலிருந்து எடுத்துப்
படம் பார்க்க தொடங்கினான்..!

இறங்கும் இடம்
நெறுங்கியதும்
சார் கொஞ்சம் வழி விடுங்க...
என நான் மட்டும்
பேசியப்படியே சென்றது
எனக்கே விநோதமாக
இருந்தது.

ரயில் நிலைய வாயிலை
கடக்கும் போது
வழி மறைத்து நின்ற
இரண்டு எருமை மாடுகள்
இறங்கி வருபவர்களைப்
பார்த்ததும் அம்மா.. ம்மா... என
குரல் எழுப்பி
பாதையை விட்டு
விலகி நடந்தன..!

- கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment