எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 29 March 2017

படித்ததில் பிடித்தவை (முனியாண்டி விலாஸ் - யுகபாரதி கவிதை)


முனியாண்டி விலாஸ்

முனியாண்டி விலாஸ்
ஓர் அசைவ உணவகம்.
இன்னும் சொல்வதெனில் அது
சாமானியர்களின் சாப்பாட்டுக்கடை.

பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்கள்
அக்கடைக்குள் நுழைவதில்லை.
எளிய மனிதர்கள் அதைத் தங்கள்
விருந்து மாளிகையாக
விளங்கிக்கொள்கிறார்கள்.

நெடிய காத்திருப்பிற்குப் பின்னே
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை
அக்கடை செய்வதில்லை.

ஆர்டர் எடுத்துக்கொள்பவர்
நம்மிலும் வறிய வாழ்வை
மேற்கொள்பவராயிருப்பார்.

ஆங்கில மெனுக்கார்டை
அக்கடை தயாரித்து வைத்திருப்பதில்லை.

மேசை துடைப்பவர்  மேலாளர் என்னும்
பாகுபாடு இல்லை.
எல்லாரும் எல்லா வேலைகளையும்
இயல்பாகச் செய்வர்.

கரகரக்கும் வானொலியில்
சீர்காழியும் ஜெயராமனும்
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்களை
மெருகேற்றிக்கொள்வர்.

கொல்வது பாவமாயிற்றே எனும்
குரலோ குமைச்சலோ
அக்கடையில அறவே கேட்பதில்லை.

நல்ல பதத்தில்
நாக்கூறும் பக்குவத்தில்
தயாராகும் அக்கடையின் உணவுவகைகள்
தமிழர்களின் தொன்ம வாடையைக்
கொண்டிருக்கும்.

கடல் நண்டெனில் மிளகையும்
காடை வறுவலெனில் மிளகாயும்
தூக்கலாக உபயோகிப்பது
முனியாண்டி விலாஸுக்கே உரியது.

ஆடு மேய்ப்பவர்கள்
அக்கடைக்கு வந்தால்
ஓர்  ஆட்டின் உயிர்ச் செயல்பாட்டிற்கு
உதவிய பாகங்களை உய்த்துணரலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட
சமையற் குறிப்புகளை அக்கடை மாஸ்டர்கள்
பழகிக்கொள்ள விரும்புவதில்லை.

உணவிற்குள் ஊடாடும் சாதியை
உட்கொள்ள நினைக்கும் யாரையும்
முனியாண்டி விலாஸ்
முகம் மலர்ந்து வரவேற்கிறது.

முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ
அலைவதில்லை.

முனியாண்டி விலாஸுக்கு
ஊர்தோறும் கிளைகளுண்டு.
ஒவ்வொரு முனியாண்டி விலாஸும்
ஒவ்வொரு சமஸ்தானம்.

மதுபோதை மண்டையிலேற
மங்கலான கிறக்கத்தோடு அக்கடைக்கு வருபவர்
தங்கள் புராதன பெருமைகளில் ஒன்றாக
முனியாண்டியைக் கருதுவர்.

கல்லாமேசையில் வைக்கப்பட்டிருக்கும்
திருநீறையும் குங்குமத்தையும் வேண்டியவர்
எடுத்துக்கொள்ளலாம்.

அடங்காமல் செருமலாம்.
அதிர அதிர அரட்டையடிக்கலாம்.
வீடுபோல் உணரலாம்.
வேண்டியதைத்  தமிழிலேயே கேட்கலாம்.

முனியாண்டி விலாஸ்
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும்
முனியாண்டியாகவே பார்க்கிறது.

கணினிக்கும்
டிஸ்யூ பேப்பருக்கும் மயங்குவதில்லை.
எதற்காகவும்  தன் அசலான முகத்தை
மாற்றிக்கொள்ள முயலுவதில்லை.

முனியாண்டிகளுக்காக
முனியாண்டிகளால் நடத்தப்படும்
முனியாண்டி விலாஸ்
ஒரு சமூகத்தின் செயல்பாடு
ஒரு சமூகத்தின் அடையாளம்
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர்.

முனியாண்டிகளாய்த்  தங்களை
உணராதவர்கள் அக்கடைக்கு வருவதில்லை.
முனியாண்டிகளை  உணராதவர்களும்…


-   யுகபாரதி.

No comments:

Post a Comment