எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
- படித்ததில் பிடித்தவை (1139)
- எனது கவிதை (223)
- பார்த்ததில் பிடித்தது (20)
- ஓவியங்கள் (8)
- புத்தகம் (5)
- எனது கட்டுரை (2)
- திரைப்படம் (2)
Saturday, 27 May 2017
Friday, 19 May 2017
படித்ததில் பிடித்தவை (“சந்தேகத்தின் நிழல்!” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)
சந்தேகத்தின் நிழல்!
‘ஒருவரது வீட்டுக்குள் சந்தேகம் நுழையும்
போது சந்தோஷம் வெளியேறிப் போய் விடும்’ என்பார்கள்.
சந்தேகம் என்பது தீர்க்க முடியாத மன வியாதி; சமூகத்தில்
வேகமாக பரவி வரும் விஷக் கிருமி!
உண்மையை மறைப்பதே சந்தேகத்தின்
தோற்றுவாய். உண்மையை அறிந்துகொள்ள சந்தேகம் தேவைப்படுகிறது. அரசும் அதிகாரமும்
தங்களை ஏமாற்றுகிறது என மக்கள் சந்தேகம் கொள்வது தவறில்லை. சுயலாபங்களுக்காக வணிக
நிறுவனங்கள் மோசடி செய்கின்றன என்று சாமானியன் சந்தேகப்படுவது தவறில்லை. நீதி
மறுக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அதிகாரத்தை சந்தேகம்
கொள்ளவேண்டியது இயற்கையே. ஆனால், குடும்ப உறவுகளை
சந்தேகப்படுவதும், வீண்சந்தேகத்தின்பேரில் தன்னை
வதைத்துக்கொள்வதும், கண்டிக்கவும் களையவும் வேண்டிய விஷயம்!
கவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் ஒரு
பாடலில் ‘தன்னைத் தானே
நம்பாதது சந்தேகம்; அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய்
தந்தையாகும்’ என்கிறார். மிகச்
சரியான விளக்கம் அது.
இந்திய வரலாற்றில்
சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டவர்கள் ஏராளம். அதில், சிலரே
வஞ்சகர்கள். பெரும்பாலும் அப்பாவிகளே சந்தேகத்தின்பேரில் துரோகிகளாக
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் கடந்து
உண்மை வெளிப்பட்டபோதும் அவர்கள் மீது படிந்த கறை நீங்குவதில்லை.
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவை
சந்தேகத்தின் உருவமாகச் சொல்வார்கள். அவன் மனைவி டெஸ்டிமோனாவைச் சந்தேகம்கொண்டு கொன்றுவிடுகிறான்.
முடிவில், அவள்
அப்பாவி எனத் தெரியவருகிறது. ஒத்தல்லோவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்
கொள்ளவில்லை. மாறாக, ஊருக்கு ஒரு ஒத்தல்லோ உருவாகி
வருகிறார்கள்.
இன்று, எத்தனையோ
குடும்பங்கள் சந்தேகத்தால் பிரிந்து, நீதிமன்ற வாசல்களில்
நிற்கின்றன. சமூக ஊடகங்கள் அதுவும் ஃபேஸ்புக் போன்றவற்றின் வளர்ச்சி சந்தேகத்தின்
வேகத்தை அதிகமாக்கிவிட்டது. ஃபேஸ்புக்கில் தனது மனைவி அல்லது காதலி தனக்குத்
தெரியாமல் யாருடனோ பேசிப் பழகிவருகிறாள் என்ற சந்தேகம் ஆண்கள் பலருக்கு
இருக்கிறது. இதுபோலவே கணவன் அல்லது காதலன் யாருடனோ ரகசியமாகப் பழகுவதாக நினைக்கும்
பெண்களும் இருக்கிறார்கள். இரண்டிலும் சந்தேகப்பட வேண்டிய காரியங்கள் நடக்கவும்
செய்கின்றன. ஆனால் எது நிஜம் என்று அறியாமல், சந்தேகத்தின்
விஷம் ஒருவருக்குள் ஆழமாக இறங்கி வன்கொலையில் போய் முடிகிறது என்பதே துயரம்.
ஸ்பை கேமரா, ஸ்பை ரெக்கார்டர்
போன்றவை இன்று அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறவர்கள்
துப்பறியும் நிபுணர்கள் இல்லை; சந்தேகவாதிகளே. பரஸ்பர
நம்பிக்கைகள் தகர்ந்துவருவதும்; வீட்டுக்குள்ளாக
ஒருவரையொருவர் ஏமாற்றி வாழமுடியும் என்ற கள்ளத்தனம் உருவானதும், அறம் அழிந்துபோன சமூகச் செயல்களுமே சந்தேகத்துக்கான முக்கிய காரணங்கள்!
‘ஒரு சொட்டு சந்தேகம் போதும் ஒருவரின்
வாழ்க்கை நரகமாக!’ என்கிறது துருக்கி
கதை. பாக்தாத் நகரில் மாறாத அன்பு கொண்ட இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும்
ஒன்றாகவே கடை நடத்தினார்கள். சகோதரிகளை திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரே
வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களின் அன்பைக் கண்டு
வியக்காதவர்களே கிடையாது. சந்தையில் அவர்கள் நடந்து போகும்போது ‘அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும்!’ என்று அடையாளம் காட்டுவார்கள். அவ்வளவு சிறப்பான
மனிதர்களாக வாழ்ந்தார்கள்.
ஒருநாள் அண்ணன் கடையை மூடும்போது
தங்கக் காதணி ஒன்றைப் பார்த்தான். அது தன் மனைவியின் காதணி. இது எப்படி கடைக்குள்
வந்தது என்று யோசித்தான். தம்பியிடம் இதைப் பற்றி கேட்கலாம் என நினைத்தான். ஆனால், கேட்கவில்லை.
மாறாக தம்பி மீது சந்தேகம் கொள்ளத்
தொடங்கினான். ஒவ்வொரு நாளும் தம்பி உச்சிவேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியே
போவதும், சற்று
நேரத்தில் அமைதியாக வந்து வேலையைத் தொடர்வதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம்
அதிகமானது.
அது போலவே ஓர் இரவு தன் மனைவியிடம்
தம்பி ஏதோ பேசிக் கொண்டிருப்பதும், அவள் ரகசியமாக எதையோ தருவதையும் கண்ட
அண்ணனுக்கு சந்தேகம் உறுதியானது, அன்று முதல் அவன் தம்பியைக்
கண்டாலே எரிந்துவிழத் தொடங்கினான். மனைவியைக் காரணம் இல்லாமல் அடித்தான். தம்பியோ
அண்ணனின் கோபத்தை தாங்கிக் கொண்டான். அண்ணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் எனப்
புரியாமல் தவித்தான் தம்பி.
அண்ணன் தானாக கற்பனை செய்ய
ஆரம்பித்தான். தம்பி தன்னை ஏமாற்றி பணம் சேர்க்கிறான். தன் மனைவியோடு
கள்ளத்தனமாகப் பழகுகிறான். தனது பிள்ளைகள் அவனுக்கு பிறந்தவையாக இருக்கக்கூடும்.
முடிவில் ஒருநாள் தன்னை கொன்றுவிட்டு சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்பி திட்டம்
போடுகிறான் என அண்ணன் நினைத்தான். இந்தக் கவலை அவனை வாட்டியது. உறக்கம் இல்லாமல்
தவிக்க வைத்தது.
முடிவில் ஒருநாள் தான் வணிகத்தின்
பொருட்டு வெளியூர் போய்வருவதாகக் கூறிவிட்டு உள்ளுரிலே ரகசியமாக தங்கிக் கொண்டான்
அண்ணன். தான் இல்லாத நேரத்தில் தம்பி ரகசியமாக ஒரு வீட்டுக்குப் போய் பணம்
தருவதையும், தன் மனைவி யாருக்கும் தெரியாமல் உணவு கொண்டுவந்து தருவதையும் கண்டு
கொதித்துப் போனான். கடையை மூடிவிட்டு தம்பி திரும்பி வரும்போது, அவனை மறைந்திருந்து கொலை செய்துவிட்டு, தன்
மனைவியைக் கொல்ல வீட்டுக்குப் போனான்.
மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை வாளால் வெட்டி துண்டிக்கப்போகும்போது அவள் 'ஏன் என்னைக்
கொல்கிறீர்கள்? அந்தக் காரணத்தை மட்டும் சொல்லுங்கள்' எனக் கதறினாள். அண்ணன் நடந்த விஷயங்களைக் கூறினான்.
அதற்கு மனைவி 'என் காதணியை உங்கள் சிறிய மகன்தான் எடுத்து
உங்கள் சட்டைப் பையில் போட்டிருக்கிறான். அதைக் காணவில்லை என்று தேடிக்
கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வீர்களோ எனச் சொல்லவில்லை' என்றாள்.
‘பொய் சொல்லாதே. என் தம்பி ரகசியமாக
வெளியே போவதும். நீ அவனுடன் இரவில் பேசுவதும், அவனுக்கு
சாப்பாடு தருவதும் சல்லாபம் இல்லையா?’ எனக்
கத்தினான். அதற்கு அவள் சொன்னாள்: 'உங்கள் தம்பி
குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம்
தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு
கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். அவர் மனைவிக்கு
பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள்
சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது
உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்… என் தலையைத் துண்டியுங்கள்!' என அழுதாள்.
‘உண்மையை உணர்ந்த வணிகன் தன் சந்தேகம்
எவ்வளவு முட்டாள்தனமானது என உணர்ந்து அதே வாளால் தன்னை வெட்டி சாய்த்துக்கொண்டான்’ என கதை முடிகிறது.
சந்தேகத்தின் விளைவுகளைப் பற்றி
இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், இன்றும்
படித்தவர் பாமரர் எனப் பேதமின்றி மனிதர்கள் சந்தேகத்துக்கு பலியாகி வருகிறார்கள்
என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே உள்ளது!
-
எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 16.05.2017)
*** *** ***
Thursday, 11 May 2017
படித்ததில் பிடித்தவை (“ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்” - கதிர்பாரதி கவிதை)
ஐ லவ் திஸ் லவ்வபிள்
இடியட்
“வேட்டி மட்டுமே
உடுத்தும் மாமனுக்கு
வாக்கப்பட்ட அத்தையொருத்தி
தன் மனசுக்குள்
மடித்துவைத்திருக்கிறாள்
பெல்பாட்டம் பேன்ட் ஒன்றை.
யாருமற்ற பொழுதுகளில்
அதை வெளியே எடுத்து
உதறி
நீவிவிட்டு
மீண்டும் மடித்து
வைத்துக்கொள்கிறாள்.
அப்போது மட்டும்
மிகச் சன்னமாக ஒலிக்கவிடுவாள்
யெஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்
பாடலை.
மற்றபடி
மாமனுக்கு மூன்று பிள்ளைகள்
பெற்றிருக்கிறாள்
அதிலொன்று இரட்டைப் பிரசவம்.”
- கதிர்பாரதி,
Saturday, 22 April 2017
“தவறவிடக் கூடாத சிறார் புத்தகங்கள்”
(தொகுப்பு: ஆதி)
ஏப்ரல்
23 - உலகப் புத்தக நாள்
உலகப் புத்தக
நாளையொட்டித் தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள்
அவசியம் படிக்க வேண்டிய 20 புத்தகங்களைப் பார்ப்போம்.
10 நேரடி தமிழ்ப்
புத்தகங்கள்
"ஆடும் மயில் மற்றும் மலரும்
உள்ளம்",
அழ.வள்ளியப்பா,
என்.சி.பி.எச். வெளியீடு.
அழ.வள்ளியப்பா,
என்.சி.பி.எச். வெளியீடு.
புகழ்பெற்ற
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல் தொகுதிகள் இவை. குழந்தைகளே வாசித்து, பாடி மகிழக்கூடிய பல்வேறு பாடல்களைக்
கொண்ட தொகுப்புகள்.
"தரங்கம்பாடி தங்கப் புதையல்",
பெ. தூரன்,
வானதி வெளியீடு.
பெ. தூரன்,
வானதி வெளியீடு.
பண்டைய துறைமுக
ஊரான தரங்கம்பாடியில் இருக்கும் புதையலைச் சிறுவர்களே தேடிச் செல்லும் சாகசக் கதை.
"சந்திரகிரிக் கோட்டை",
ஆர்.வி.
ஆர்.வி.
‘கண்ணன்’ இதழின் ஆசிரியர் ஆர்.வி. பல்வேறு வகைக் கதைகளை எழுதுவதற்காக
அறியப்பட்டவர். அவர் எழுதிய சாகசம் நிறைந்த கதை இது.
"கானகக் கன்னி",
கல்வி கோபாலகிருஷ்ணன்,
சாகித்ய அகாடமி வெளியீடு.
கல்வி கோபாலகிருஷ்ணன்,
சாகித்ய அகாடமி வெளியீடு.
குழந்தைகளுக்கான
அறிவியல் நூல்களை எழுதுவதற்காகப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், தாவரங்களைப் பற்றி கதை போல அறிந்துகொள்ள
வாய்ப்பளிக்கும் இந்த நூல் மத்திய அரசின் பரிசைப் பெற்றது.
"சிற்பியின் மகள்",
பூவண்ணன்,
வானதி வெளியீடு.
பூவண்ணன்,
வானதி வெளியீடு.
குழந்தைகளுக்கான
வரலாற்று கதைகளை எழுதுவதற்குப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், வரலாற்று பின்னணியில் சிற்பி ஒருவரைப்
பற்றி எழுதிய கதை.
"தங்க மயில் தேவதை",
முல்லை தங்கராசன்,
பூங்கொடி வெளியீடு.
முல்லை தங்கராசன்,
பூங்கொடி வெளியீடு.
ஒரு விறகு
வெட்டிக்குத் தங்க முட்டையிடும் மயில் கிடைக்கிறது. அது திடீரெனத் தங்க
முட்டையிடுவதை நிறுத்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் மாயாஜாலங்களும்
மர்மமும் கூடிய கதை.
"மர்ம மாளிகையில் பலே பாலு",
வாண்டுமாமா,
வானதி வெளியீடு.
வாண்டுமாமா,
வானதி வெளியீடு.
வாண்டுமாமாவின்
புகழ்பெற்ற கதாபாத்திரங்களான பலே பாலு, சமத்து
சாரு, அண்ணாசாமி போன்றவர்களின் ஜாலியான
சேட்டைகள் நிறைந்த படக்கதைகள் கொண்ட நூல். படக்கதைகளை வரைந்தவர் ஓவியர் செல்லம்.
"கொடி காட்ட வந்தவன்",
ரேவதி,
தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.
ரேவதி,
தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.
1934-ம் ஆண்டு குற்றாலத்தில் குளிக்க வரும்
மகாத்மா காந்தி, அங்குத் தாழ்த்தப் பட்டவர்கள்
குளிக்கத் தடை இருப்பதை அறிந்து திரும்பிச் சென்றது ஓர் உண்மைச் சம்பவம். அதன்
அடிப்படையில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதை.
"ஆயிஷா",
இரா.நடராசன்,
புக்ஸ் ஃபார் சில்ரன்.
இரா.நடராசன்,
புக்ஸ் ஃபார் சில்ரன்.
அறிவியல் மனப்
பான்மை தொடர்பாக உத்வேகம் ஊட்டும் ஆயிஷா என்று பள்ளிச் சிறுமியை அடிப்படையாகக்
கொண்ட புகழ்பெற்ற கதை.
"இருட்டு எனக்குப் பிடிக்கும்
(அன்றாட வாழ்வில் அறிவியல்)",
ச. தமிழ்ச்செல்வன்,
அறிவியல் வெளியீடு.
ச. தமிழ்ச்செல்வன்,
அறிவியல் வெளியீடு.
குழந்தைகளுக்கு
அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்து புதிய பார்வையுடன், எளிய முறையில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட எட்டு
கட்டுரைகளைக் கொண்ட நூல்.
10 மொழிபெயர்ப்புப்
புத்தகங்கள்
"அப்பா சிறுவனாக இருந்தபோது",
அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு),
புக்ஸ் ஃபார் சில்ரன்.
அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு),
புக்ஸ் ஃபார் சில்ரன்.
ஒவ்வொருவரும்
சிறு பிள்ளைகளாக இருந்தபோது செய்த சேட்டைகள், அட்டகாசங்களைச் சிரிக்கச் சிரிக்கத் திரும்பப் படிப்பதற்கு வாய்ப்பளிக்கும் நூல்.
"குட்டி இளவரசன்",
அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி,
க்ரியா வெளியீடு.
அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி,
க்ரியா வெளியீடு.
உலகப்
புகழ்பெற்ற, கோடிக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட இந்த
நூல் குழந்தைகளுக்கான நூலாகப் போற்றப்படுகிறது. குழந்தைகளின் உலகுக்கே உரிய
அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிரம்பிய நூல்.
"நீச்சல் பயிற்சி",
ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்),
என்.சி.பி.எச். வெளியீடு.
ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்),
என்.சி.பி.எச். வெளியீடு.
பல்வேறு ரஷ்ய
எழுத்தாளர்கள் எழுதிய குழந்தைகளுக்கான இந்தக் கதைகள் இன்றைக்கும் சிறிதளவுகூடச்
சுவாரசியம் குன்றாமல் உள்ளன.
"ஆலிஸின் அற்புத உலகம்",
லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்),
வம்சி வெளியீடு.
லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்),
வம்சி வெளியீடு.
முயலின்
வளைக்குள் சென்று ஒரு திரவத்தைக் குடித்துச் சிறிய உருவைப் பெறும் ஆலிஸ், பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த
உலகுக்குள் உலவுகிறாள். மாயாஜாலக் கதைகளில் உச்சம் தொட்ட புத்தகம் இது.
"வாசித்தாலும் வாசித்தாலும்
தீராத புத்தகம்",
எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்),
அறிவியல் வெளியீடு.
எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்),
அறிவியல் வெளியீடு.
உயிரினங்களைப்
பற்றியும், அவற்றின் வாழ்க்கை பற்றியும் நாம்
அறிந்ததும் புரிந்துகொண்டதும் குறைவு. இந்தப் புத்தகத்துக்குள் புகுந்து
வெளிவரும்போது, எல்லா உயிரினங்களையும் நாம் நேசிக்க
ஆரம்பித்துவிடுவோம்.
"சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்",
ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்),
புக்ஸ் ஃபார் சில்ரன்.
ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்),
புக்ஸ் ஃபார் சில்ரன்.
ஸாய் விட்டேகர், கீதா ஹரிஹரன், ஷாமா ஃபதேஅலி, போலி சென் குப்தா போன்ற புகழ்பெற்ற
ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளின் தொகுப்பு.
"கானகத்துக் கீதங்கள்",
ஜித் ராய் (கு.ராஜாராம்),
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.
ஜித் ராய் (கு.ராஜாராம்),
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.
காடுகள், உயிரினங்களைப் பற்றி மிக எளிமையாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கி
இயற்கையின் உன்னதத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் நூல்.
"பெனி எனும் சிறுவன்",
கிகோ புளூஷி, (யூமா வாசுகி),
புக்ஸ் ஃபார் சில்ரன்.
கிகோ புளூஷி, (யூமா வாசுகி),
புக்ஸ் ஃபார் சில்ரன்.
புறஉலகைப் பற்றி
பெரிதாக அறியாத நகரத்துச் சிறுவனாக இருக்கும் பெனி, தன் மாமாவின் கிராமத்துக்குச் சென்று திரும்பும்போது, முற்றிலும் மாறுபட்ட ஒருவனாக
இருக்கிறான். குழந்தைகளின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் நாவல்.
"புத்தகப் பரிசுப் பெட்டி",
15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர்,
புக்ஸ் ஃபார் சில்ரன்.
15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர்,
புக்ஸ் ஃபார் சில்ரன்.
காலம் காலமாக
நம்மிடையே புழங்கி வரும் கதைகளும் நம்மைச் சுற்றியுள்ள காக்கா, அணில், பூனை, நாய், குரங்கு, யானை போன்றவற்றைப் பற்றியும் கருத்தைக்
கவரும் ஓவியங்களைக் கொண்ட 15
புத்தகங்களின்
தொகுப்பு.
"கனவினைப் பின்தொடர்ந்து",
த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்),
எதிர் வெளியீடு.
த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்),
எதிர் வெளியீடு.
நம் மறந்துவிட்ட, அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு
வரலாற்று செய்திகளைக் கதைபோலச் சுவாரசியமாகத் தரும் நூல்.
(நன்றி: தி இந்து)
*** *** ***
*** ***
Sunday, 16 April 2017
Sunday, 9 April 2017
படித்ததில் பிடித்தவை (“பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான்” - சுஜாதா கட்டுரை)
பிரச்னை குர்ஆனில் இல்லை;
நம்மிடம்தான்.
"திருக்குர்ஆனுடன் என்
முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப்
பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது,
திடீரென்று
'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு
பார்க்கலாம்டா' என்றார்.
நான் உடனே புத்தகக் கடைக்குப்
போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்'
என்ற
ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத்
தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள்
கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.
'வாழ்வுக்கான நடைமுறைக்
குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும்,
எந்தச்
சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!'
என்று
வியந்தோம்.
அதன்பின்,
பல்வேறு
சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து
வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார்
வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர்
முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்',
நவீன
உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில்,
இஸ்லாம்
எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள்
அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான்
சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும்
மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக்
கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை
நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல்
நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி
வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல,
அண்ணல்
குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின்
எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
'சிலைகள் உதவாதவை.
அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு,
கதிரவன்,
தாரகைகள்,
வானம்,
பூமியில்
உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன்.
அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ
செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'
'திடவிசும்பு எரி வளி
நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும்
பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை,
கொடுமை,
கோபம்,
பிறரைப்
போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு
மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல்,
இரட்டை
வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு,
பாரபட்சம்,
பொருத்தமற்ற
புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம்,
வாக்குறுதி
மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம்,
குறை
கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை,
கெட்ட
பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம்,
நிதானம்,
எளிமை,
தூய்மை,
வணங்குவது,
நாவடக்கம்
போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து
கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை
வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என்
தந்தையார் தீவிர வைணவர்."
-
சுஜாதா (தினமணி, ரம்ஜான் மலர்
- 2003)
*** *** *** ***
Subscribe to:
Posts (Atom)














