எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 6 May 2019

படித்ததில் பிடித்தவை (‘தீயான ஒரு பொறி’ – எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரை)


தீயான ஒரு பொறி

ஒரு முறை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து வந்திருந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கம்பார்ட்மென்டில் இருந்தார்கள். அவர்கள் திடீரென ஆளுக்கு ஒரு பையோடு எழுந்து ரயில் பெட்டிகளுக்குள் நடக்கத் தொடங்கினார்கள். அந்த பையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி புத்தககங்கள் இருந்தன.

யார் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்க எடுத்துக் கொள்ளலாம். படித்து முடித்தவுடன், அங்கேயே வைத்துவிடவும். சென்னை வந்தவுடன் நாங்கள் சேகரித்துக் கொள்கிறோம் என்றார்கள்.

ஆச்சர்யமாக இருந்தது. 32 மணி நேரப் பயணத்தில் பயணிகள் தாங்கள் விரும்பிய புத்தகங்களைத் தேர்வு செய்து படித்துக் கொண்டு வந்தார்கள். சிலர் படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகங்களைப் பெற்று வந்தார்கள்.
சென்னையை நெருங்கும் போது நான் அந்த இளைஞர்களிடம் சென்று பாராட்டுத் தெரிவித்தபடியே, இந்த யோசனை எப்படி உருவானது? எனக் கேட்டேன்.

பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சோம். அதுல ஒருத்தர் இப்படி எழுதியிருந்தார். அதை நாங்க ட்ரை பண்றோம் என்றார்கள்.

என்ன எழுதியிருந்தார்? எனக் கேட்டேன்.

ராஜஸ்தான்ல ஒட்டகத்துல கொண்டு போய் புக்ஸ் தர்ற மொபைல் லைப்ரரி இருக்கு. தாய்லாந்துல குக்கிராமங்களுக்கு யானையில கொண்டுபோய் புக்ஸ் கொடுக்கிறாங்க. நம்ம ஊர்ல லாங் ஜர்னி போற ட்ரெயின்ல தனியா ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏன் லைப்ரரி வைக்கக் கூடாதுனு எழுதியிருந்தார். அதைத்தான் நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தோம் என்றார்கள்.

அந்தக் கட்டுரையை நான்தான் எழுதினேன் என அவர்களிடம் சொன்னேன்.

சந்தோஷத்தில் சிரித்தபடியே, சாரி சார், உங்க பெயரை மறந்துட்டோம் என்றார்கள்.

எழுத்தில் உருவான ஒரு பொறி என் கண் முன்னே செயலாக மாறியிருந்தது சந்தோஷம் அளித்தது.


- எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இந்திய வானம் என்னும் புத்தகத்திலிருந்து.

3 comments: