எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 23 October 2016

படித்ததில் பிடித்தவை (“சாலையோரத் தையல்காரர்” – மகுடேசுவரன் கவிதை)


சாலையோரத் தையல்காரர்
“சாலையோரத் தையல்காரர் அவர்.
நரைகூடிய முதியவர்.

வாகனப் பெருக்கமுள்ள
சாலையோரம் அமர்ந்திருக்கின்றார்.

சாலையில் விரைவோர் யாரும்
அவரை ஒரு பொருட்டாகவே
கருதியதில்லை.

நாள் தவறாமல்
அந்தச் சிறுமர நிழலில்
கருமமே கண்ணாய்க் காணப்படுவார்.

தயாரிப்பு நிறுத்தப்பட்ட
ஒரு தையல் எந்திரத்தில்
சிறு சக்கரங்கள் பொருத்தி
தள்ளுவண்டி ஆக்கியிருக்கிறார்.

புதுத் துணியொன்றைத் தைக்கும்
பேறற்றதுதான் அந்த எந்திரம்.
பழையவற்றையும் கிழிந்தவற்றையுமே
எப்போதும் தைப்பது அது.

பகட்டுக்கு உடுத்துவோரை
அவரும் அறியார்.

பழைய துணியை
நேர்த்திசெய்து அணியும்
நம் போன்ற எளிய மனத்தினரே
அவருக்கு வாடிக்கையாளர்.

நம் மனமறிந்து
கடைவிரித்திருக்கிறார்.

தாம் செய்யவேண்டிய பணி
இந்நாளில் இவ்வூரில்
யாருக்கோ தேவையென்ற நம்பிக்கைதான்
அவரை நாள்தோறும்
அங்கே அழைத்துவருகிறது.
அந்நம்பிக்கை பொய்த்ததில்லை.

வண்டியை ஓட்டிவந்து
வாகாக நிறுத்தியதும்
அதில் தொற்றியிருக்கும் நாற்காலியை
எடுத்துப்போட்டு அமர்கிறார்.

எந்திரப் பலகையின்
வலது கீழாய்ப் பொருத்தியுள்ள
சிறிய இழுப்பறையில்
இளைத்த நூல்கண்டுகள்
வண்ணத்துக்கு ஒன்றாய்
ஏழெட்டு இருக்கின்றன.

கைப்பட்டுக் களிம்பேறிய
தண்ணீர்ப் புட்டியும்
மதியச் சோற்றுப் பாத்திரமும் உள்ளன.

எந்திரத்தைத் துடைத்துக்கொண்டிருக்கையில்
தன் கறுப்பு இரவிக்கையைப்
பிரித்து அடித்துத் தரும்படி
ஒருத்தி துணி கொணர்கிறாள்.

தையல் பிரித்துத்
தையலடித்துத்
தையலிடம் தருகிறார்
தையல்காரர்.

கூலியாய்க் கிடைத்த பத்தை
கண்ணொற்றி வைத்துக்கொள்கிறார்.

அடுத்து வருமொருவர்
தாம் அப்போதுதான் வாங்கிவந்த
புதுக் கைலியை மூட்டித் தரசொல்கிறார்.

மலர்ந்த முகத்தோடு
வாங்கிக்கொள்ளும் தையல்காரர்
அந்தப் புதுத்துணியை
அளப்பரிய விருப்போடு
மடிபிரித்து விசிறுகிறார்.

இச்சிறுநாளில்
இது கிடைத்தற்கரிய பேறுபோல்
மனமொன்றி
அந்தக் கைலியை மூட்டுகிறார்.

எந்திரத்தை மிதிக்கையில்
மெல்லிய நடன அடவுபோன்ற ஒன்றால்
அவருடல் அசைகிறது.

தையல் எந்திரத்தின் ஒலிப்பில்கூட
மகிழ்ச்சியின் உற்சாகச் சுவடு.

பழைமைக்கென்றே
ஒதுக்கப்பட்ட நொடிகளில்கூட
இதுபோல் புதிது வாய்ப்பதும்
வாழ்வின் தீராப்புதிர்களில் ஒன்றுதான்.

மதியமாகிவிட
சோற்றுப் பாத்திரத்தை எடுத்து
உண்கிறார்.

மேலும் சில தையல் பணிப்புகள் வர
மாலை ஆகிறது.

மீண்டும் தையல் எந்திரம்
ஏறக்கட்டப்படுகிறது.

சிறு சக்கரங்கள் ஒலிக்க
சாலையின் ஆயிரம் வண்டிகளோடு
அந்தத் தையல்வண்டியும்
நகர்ந்து மறைகிறது.

மரத்தடியில்
அந்திவானச் சிதறலைப்போல்
சில துணித்துண்டுகள் கிடந்தன.”

-          மகுடேசுவரன்.

2 comments:

  1. ஒரு சிறுகதையும் கவிதையாகின்றது. மரபுகள் உடைக்கப்பட்டதால்தான் இது போன்ற வருடுகின்ற கவிதைகளை உருவாக்கமுடிகின்றது போலும்.
    சு. பரந்தாமன்.

    ReplyDelete
  2. உண்மைதான் பரந்தாமன் சார்...

    ReplyDelete