எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 6 August 2016

படித்ததில் பிடித்தவை (வழியில் ஒரு சந்திப்பு - மனுஷ்யபுத்திரன் கவிதை)


வழியில் ஒரு சந்திப்பு
“பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்
இரண்டு தோழிகள்
வழியில் எங்கோ
ஒரு கடைவாசலில் வைத்து
தற்செயலாகச் சந்தித்துக்கொண்டார்கள்

எப்படியிருக்கிறாய்
என்று கேட்டுக்கொள்ளக்கூட
அவர்களுக்கு அவகாசம் இல்லை
வெறுமனே அணைத்துக்கொண்டு
தேம்புகிறார்கள்

பதினைந்து ஆண்டுகளில்
இரண்டு பெண்களுக்கும்
என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்?

இரண்டு பெண்களுக்கும்
அது மிக நீண்ட காலம்
அது மிக நீண்ட பருவம்
அது மிக நீண்ட ஒரு கதை
அது மிக நீண்ட ஒரு கண்ணீர்

இரண்டு பெண்களில்
ஒருத்தி பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்பு
எப்படி இருந்தாளோ
அப்படியேதான் இருக்கிறாள்
அது இன்னொருத்தியை
மனமுடையச் செய்கிறது

ஒருத்தியின் கைகளில் இன்னொருத்தி
ஆழமான காயத்தழும்புகளைப் பார்க்கிறாள்
கேட்பதற்கு என்ன இருக்கிறது?
சொல்வதற்கு என்ன இருக்கிறது?

யார் யாரைத் தேற்றுகிறோம்
என்று தெரியாமல்
மூன்று நிமிடங்கள் அழுகிறார்கள்
அது எல்லாவற்றிற்கும்
போதுமானதாக இருந்தது

கண்களைத் துடைத்துக்கொண்டு
‘ஒரு ஜூஸ் குடிக்கலாமா?’
என்கிறாள் ஒருத்தி
அவர்கள் அந்தத் தனிமையின்
முழு வெப்பத்தையும்
இரண்டு கிளாஸ்களில் பருகினார்கள்

ஒருத்திக்கு இன்னொருத்தியிடமிருந்து
பெற்றுக்கொள்ள ஏதோ இருந்தது
ஒருத்திக்கு இன்னொருத்திக்குத் தர
ஏதோ இருந்தது
கொடுப்பதற்கும் பெறுவதற்கும்
உண்மையிலேயே என்ன இருக்கிறதென்று
அவர்களுக்குத் தெரியவில்லை

அவரவர் வழியில் செல்வதற்கு முன்
கண்ணீரில்லாமல் ஒருமுறை
அவர்கள் அணைத்துக்கொள்ளக்கூடும்.”

(கவிதை: மனுஷ்ய புத்திரன், ஓவியம்: செந்தில்)
(நன்றி: ஆனந்தவிகடன், 03.08.2016)

No comments:

Post a Comment