எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 12 May 2016

படித்ததில் பிடித்தவை (யாருக்கு ஓட்டுப்போடலாம்..? - சுஜாதா கட்டுரை)


யாருக்கு ஓட்டுப்போடலாம்..?

சுஜாதா சொன்ன யோசனைகள்..!

நான் வோட்டுப் போடத் தவறுவதே இல்லை. அதுவும் இந்த முறை வோட்டுப் போடுவது என் வாழ்வில் ஒரு நீண்ட எலெக்ட்ரானிக் பயணத்தின்  நிறைவு.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில நகரத் தொகுதிகளில் எலெக்ட்ரானிக் வோட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உருவ அமைப்பில், பாரத் எலெக்ட்ரானிக்ஸில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டவன் என்கிற தகுதியில் எனக்குத் தனிப்பட்ட திருப்தி. இந்தப் பயணம் பல வருடங்களுக்கு முன் கேரளாவில் பரூரில் துவங்கியது.


முதன்முறையாக ஐம்பது இயந்திரங்களை, ஒரு தொகுதியின் பகுதியில் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். அதை எலெக்ட்ரானிக்ஸ் நுண்ணணுவியலுக்குக் கிடைத்த வெற்றியாக ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். ஆனால், இதன் முழு அறிமுகத்துக்கு இத்தனை தாமதமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், அரசியலும் நீதிமன்றங்களும்தான். எல்லாத் தேர்தலிலும் தோற்றவர் எப்போதும் தன்னைத் தவிர மற்ற எல்லாப் புறக் காரணங்களையும் கூறுவார்அந்த முறை புதிய காரணம் ஒன்று சேர்ந்துகொண்டது. இயந்திரத்தை வைத்து இன்ஜினீயர்கள், சி.ஐ.ஏ., மைய அரசு எல்லோரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று முதலில் எல்.டி.எஃப். கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அவர் வெற்றி பெற்றிட, தோற்றுப்போன யு.டி.எஃப். காங்கிரஸ் வேட்பாளரும் கேஸ் போட்டார்கள். அது கேரள உயர் நீதி மன்றத்தில் தோற்றது.

மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை  மாமியார் வீட்டுக்குப் போகும் நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்க, இடையே சில நகர்ப்புற, பாதி நகரத் தொகுதிகளில் ஏறத்தாழ பன்னிரண்டு இடங்களில் இந்த இயந்திரத்தை உப தேர்தல்களில்தேர்தல் கமிஷனில் அப்போது செக்ரெட்டரியாக இருந்த தைரியசாலி கணேசன், ஆர்ட்னன்ஸ் உதவியுடன் பயன்படுத்தினார். சுப்ரீம் கோர்ட் இறுதியில் அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்காமல் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாதுஎனத் தீர்ப்பு அளித்தது (இதற்காக நான் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று சாட்சி சொன்ன அனுபவத்தை மற்றொரு சந்தர்ப்பத்தில், என்னுடைய லீகல் அட்வைஸரைக் கலந்தாலோசித்து விட்டு எழுதுகிறேன்).

அரசியல் சட்டத்தைத் திருத்த, மக்களவைக்குத்தான் அதிகாரம் உள்ளது. மக்களவை கட்சி மாற்றம், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற தேசத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களில் கவனமாக இருந்து, தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதை நிறைவேற்ற ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆயின. இயந்திரத்துக்குப் பச்சை விளக்கு கிடைத்தது. இப்போது ராஜஸ்தானில் நயா கா(ன்)வ் என்னும் கிராமத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு வாக்காளர்களும் அதென்ன மெஷின்சீஸ் கியா ஹை என்கிற ஆர்வத்தினால் மட்டும் வோட்டுப் போட வருகிறோம்என்ற செய்தியைப் படிக்கும்போது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கிறேன்.

தேர்தல் கமிஷன் மொத்தம் ஒன்றரை லட்சம் மெஷின்கள் வாங்கி இருந்தது. ஒரு மெஷின் ஐயாயிரம் ரூபாய் என்று சுமார் எழுபத்தைந்து கோடி ரூபாய் செலவழித்து வாங்கியிருந்தவை பயன்படாமல் கலெக்டர் அலுவலகங்களிலும் தாலுகா ஆபீஸ்களிலும் உறங்கிக்கொண்டு இருந்தன. கடைசியில் ராஜகுமாரி முத்தம் கிடைத்து, ஏறத்தாழ பத்தாண்டு தூக்கத்திலிருந்து எழுந்தன.

இயந்திரங்களில் பாதி எண்ணிக்கை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்தவை. மீதி ஹைதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் மற்றொரு மத்திய சர்க்கார் நிறுவனம் தயாரித்தவை. டிஸைன் ஒன்றுதான்தமிழ்நாட்டில் ஹைதராபாத் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் பயன்படுத்த கமிஷனிடம் இருக்கும் இயந்திரங்கள் போதாது. மீண்டும் ஆர்டர் செய்து பயன்படுத்தினால் தேர்தல் முடிந்த மாலையே முடிவுகளை அறிவித்துவிடலாம். ராத்திரியே தலைவிதிகள் நிர்ணயிக்கப்பட்டு யார் சிறந்தார்கள், யார் இழந்தார்கள் என்பதெல்லாம் மறுநாள் பல் தேய்ப்பதற்குள் தெரிந்து விடும். இரும்பு வோட்டுப் பெட்டிகள் வேண்டாம். வாக்குச் சீட்டுகளை லட்சக்கணக்கில் அச்சடிக்க வேண்டியது இல்லை. கள்ளவோட்டு கிடையாது. செல்லாத வோட்டு கிடையாது. மின்வாரிய கரண்ட் தேவையில்லை, பாட்டரி. அடிக்கடி தேர்தல் வந்தால் பரவாயில்லை. பதினைந்து நாட்களுக்குள் ஒரு பொதுத்தேர்தல் நடத்தலாம். எத்தனையோ சௌகரியங்கள். பீகாரை போல அதைக் கடத்திக் கொண்டு போனால் மேலே வோட்டுப் போடாதபடி தானாகவே அணைந்து கொள்ளும்.

அதை எதிர்த்தவர்கள் முன்னேற்ற நாடான அமெரிக்காவிலேயே பயன்படுத்த வில்லையேநாம் என்ன அப்படி உயர்ந்து விட்டோம்…?’ என்கிற ஒரு வாதத்தை முன்வைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. எல்லா புத்திசாலித்தனமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் அமெரிக்கா அல்லது ஜப்பானிலிருந்துதான் வரவேண்டும் என்கிற தாழ்வுமனப்பான்மையை நீக்கியது எங்கள் முக்கிய சாதனை.

தேர்தலில் யாருக்கு வோட்டுப் போடுவதாகத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆர்வமில்லை. உங்கள் குழப்பத்துடன் என் குழப்பத்தையும் சேர்க்க ஆசையில்லை. ஆனால், வோட்டுப் போடுவது முக்கியம். காரணம், ஏதோ ஒரு விதத்தில் இந்த அதிசய ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை (அல்லது கோபத்தை, வெறுப்பை) தெரிவிக்க முடிகிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நிதரிசனங்கள் இவை சட்டப் பேரவையில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சிதான் ஆட்சிக்கு வர முடிகிறது. ஊழலிலோ அசாதனைகளிலோ இருவரும் ஒரே குட்டை மட்டைகள். வேட்டிக் கரையை உற்றுப் பார்த்தால்தான் வித்தியாசம் தெரிகிறது. அதனால்தான் தமிழ்நாடு எப்போதும் ஜராசந்த வதம் மாதிரி புரட்டிப் புரட்டிப் போட்டு இவர் போதும், அடுத்தது நீ வாய்யாநீ வந்து சுரண்டு. முதல் வருஷமாவது மக்களுக்கு ஏதாவது செய்என்று மாற்றுகிறார்கள். இடையே சினிமா நடிகர்கள் குட்டையைக் குழப்பினாலும் நெகட்டிவ் வோட்டுஎன்பது தமிழ்நாட்டின் தேர்தல் பழக்கமாகிவிட்டது.

மத்திய அரசைப் பொறுத்த வரையில் அதன் தலைவிதியை நிர்ணயிப்பது உ.பி. முதலான இந்தி வளையமும் பசுமாடும்தான். அ.தி.மு.க., தி.மு.க. இருவரும் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்த பழைய புராணங்களைப் புரட்டினால் தலை சுற்றி உடனே ஒரு லிம்கா அடிக்க வேண்டும். சேராமல் சேர்ந்து, விலகி, மீண்டும் சேர்ந்து, விலகிய இந்த விளையாட்டில் யாருக்குப் போட்டாலும் ஏமாறப் போவது மக்கள்தான்.

இதனால் தேர்தலைப் படித்தவர் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளதுகுறிப்பாக நடுத்தர, மேல்தட்டு வர்க்க மக்கள். ஏழைகளைக் குஞ்சாலாடு, மூக்குத்தி, வேட்டி சேலை, பாக்கெட் பிரியாணி என்று ஏதாவது கொடுத்துப் போட வைத்துவிடுவார்கள். நடுவாந்தரம்தான் வோட்டுப் போடுவதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து, நகம் வெட்டிக்கொண்டே எஃப். டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் வோட்டுச் சாவடிக்குப் போக கஷ்டப்பட மாட்டார்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்.

ஐ.டி கார்டு இல்லையென்றாலும் வோட்டுப் போடலாம்போட வேண்டும். யாருக்கு என்று என்னைக் கேட்டாலும், கீழ்க்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.


1 1. இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

 2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம்.

  3. யாருக்கு என்று தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்து வோட்டுக் கேட்டவருக்குப் போடுங்கள்தலையையாவது காட்டினாரே!

 4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.

 5. இதற்கு முன்பு இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால், அவர் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம் (நிலா டி.வி-யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களைப் பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை இப்ப இருக்கற எம்.பி. யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு?’ என்று கேட்டதற்கு, ‘எம்.பி-யாஅப்படின்னா?’ என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம்! அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள். அதே போல், இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும். அதை ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு, குறிப்பாக, ‘நிலையான ஆட்சி அமைக்கப் போகிறோம்என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை. வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் நான் மொட்டை போட்டுக்கொள்கிறேன்.

  6. சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.

 7. கொஞ்ச நாள் தையா, தக்கா, ஆட்டம் பாட்டம், சிக்குபுக்கு, முக்காபுலா போன்ற அறிவுசார்ந்த புரோகிராம்களைப் புறக்கணித்து பிரணாய் ராய், ரபி பெர்னார்ட், மாலன் போன்றவர்கள் நடத்தும் தேர்தல் புரோகிராம்களைப் பாருங்கள். தூர்தர்ஷன்கூடப் பார்க்கலாம். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் அல்லது தலைவரும் டி.வி-யிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டுமுழி முழிக்காதவராக, யாரைப் பார்த்தால் இவர் ஏதாவது செய்வார்முதல் நாளே உள்ளங்கை அரிக்காதுஎன்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்குப் போடலாம் (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது). அல்லது பத்து வார்த்தை கோர்வையாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தால் போடலாம்.


இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால், சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும். ஆனால், கட்டாயமாக வோட்டுப் போடுங்கள்அது அவசியம்.

பார்லிமெண்ட் தொங்கினாலும் நொண்டினாலும் பரவாயில்லை. சண்டை வந்தால் விட்டுக் கொடுப்பது இல்லை. மேலும் முதன்முதலாக இந்தக் கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்துக் கொண்டு, மர மேஜைகளைத் தட்டி வெளியேற்ற விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருந்திருக்கிறது. அது முன்னேற்றத்துக்கான அறிகுறி. ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அரசியல் மாற்றங்கள் இருந்தும், அந்த நாடுகளின் பொருளாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. நம் இந்தியப் பொருளாதாரமும் அந்த நிலைக்கு வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். அது இப்போது மனிதர்களைச் சாராமல் பருவ மழையை மட்டும் சார்ந்துள்ளது. பருவ மழையும் இவ்வளவு பாவாத்மாக்கள் இருந்தும் தவறாமல் பெய்கிறது.

தயவுசெய்து வோட்டுப் போடுங்கள். டாமினோ எஃபெக்ட்என்று ஒன்று உள்ளது. அதன் மூலம் உங்கள் ஒற்றை வோட்டை வைத்துக்கொண்டு தேசத்தின் தலைவிதியைப் படித்தவர்களால் மாற்ற முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் ஊரின் பஸ் ஸ்டாண்ட் சமீபம்அஜீஸ் மான்ஷனுக்கு பதினெட்டாம் தேதி சூறாவளிச் சுற்றுப் பயணம் வரும்போது சொல்கிறேன். ரூம் நம்பர் பதினெட்டு. அவசரத்தில் இருப்பவர்கள் ரூபாய் பதினெட்டுக்கு ஒரு மணியார்டர் அல்லது டிராஃப்ட் எடுத்து அனுப்பினால் (வி.பி.பி. கிடையாது) தபாலில் விடை அனுப்பப்படும். நீங்கள் அனுப்புவதில் ஒரு ரூபாய் கார்கில் நிதிக்கு அனுப்பப்படும். Jokes apart, please vote. It is your sacred duty.

(29.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடரிலிருந்து….)

*** *** *** ***

No comments:

Post a Comment